மும்பை,-நம் கடற்படையின், ‘பிராஜெக்ட் – 75’ திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆறு நவீன நீர்மூழ்கி கப்பல்களில் கடைசி கப்பலான, ஐ.என்.எஸ்., வாக் ஷீர் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
நம் கடற்படைக்கு, ஆறு புதிய நவீன நீர் மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, பிராஜெக்ட் – 75 திட்டம் உருவாக்கப்பட்டது. மும்பையை சேர்ந்த, ‘மசாகான் டாக் ஷிப்பில்டர்ஸ்’ என்ற கப்பல் கட்டும் பொதுத் துறை நிறுவனம், ஐரோப்பிய நாடான பிரான்சின், ‘நேவல் குரூப்’ நிறுவனத்தின் உதவியுடன், இந்த கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.இத்திட்டத்தின் கீழ், ஐ.என்.எஸ்., கல்வாரி, காந்தேரி, கரங், வேலா ஆகிய நீர் மூழ்கி கப்பல்கள், பல்வேறு கால கட்டங்களில் கடற்படையில் சேர்க்கப்பட்டன. ஐந்தாவது நீர் மூழ்கி கப்பலான, ஐ.என்.எஸ்., வகீர், பிப்ரவரி முதல் கடல் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடைசி மற்றும் ஆறாவது நீர்மூழ்கி கப்பலான, ஐ.என்.எஸ்., வாக் ஷீர் மும்பையில் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டது.ராணுவத் துறைச் செயலர் அஜய் குமார் இந்த நீர்மூழ்கி கப்பலை அறிமுகப்படுத்தினார். ஓராண்டுக்கும் மேலான தீவிர சோதனைகளுக்கு பின், இந்த கப்பல் படையில் சேர்க்கப்பட உள்ளது. பிராஜெக்ட் – 75ல் தயாரிக்கப்படும் கப்பல்கள், கடல் வழி தாக்குதல்களை எதிர் கொள்வது மட்டுமின்றி, தரையில் இருந்து வரும் தாக்குதல்களையும் முறியடிக்கும் திறன் உடையவை.
Advertisement