சண்டிகரை சேர்ந்த ஒருவர் தன்னுடைய 70 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய ஹோண்டா ஆட்டிவா ஸ்கூட்டருக்கு, வி.ஐ.பி நம்பர் ப்ளேட் பெறுவதற்காக 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
சண்டிகரில் ஏப்ரல் 14 முதல் 16 வரையில் சண்டிகர் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் நடத்திய ஏலத்தில் 378 வண்டிகளுக்கான நம்பர் ப்ளேட்கள் ஏலத்தில் விடப்பட்டன. இந்த ஏலத்தில் இருந்து மொத்தமாக 1.5 கோடி ரூபாய் பணம் வசூலாகியிருந்தது. இதில் CH01 CJ 001 என்ற எண்ணுக்கான ஏலம் ரூ. 5 லட்சத்தில் தொடங்கியது; இறுதியில் 15.4 லட்ச ரூபாய்க்கு அந்த நம்பர் ப்ளேட்டை பீர்ஜ் மோகன் என்னும் நபர் ஏலத்தில் எடுத்துள்ளார்.
45 வயதான பீர்ஜ் மோகன் தனது ஹோண்டா ஆக்டிவாவுக்கு இந்த நம்பர் ப்ளேட்டை பயன்படுத்த இருப்பதாகவும், தீபாவளிக்கு தான் கார் வாங்கவிருப்பதாகவும், அதன் பின் இந்த நம்பர் ப்ளேட்டை அதில் மாற்றவிடப் போவதாகவும் கூறியுள்ளார். விளம்பர நிறுவனத்தை நடத்தும் பிரிஜ் மோகன், CH01CJ 001 நம்பர் ப்ளேட்டை அதிக விலையில் ஏலம் எடுத்தது பற்றி கூறியபோது, அந்த எண் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும், அதை ரூ.15.44 லட்சத்திற்கு வாங்கியது மகிழ்ச்சியைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
CH01 CJ 001என்ற நம்பர் ப்ளேட்டுக்கு அடுத்தபடியாக, CH01 CJ 002 என்ற நம்பர் ப்ளேட் 5.4 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. தற்போது 001 என்ற எண்ணில் இருந்து எண் 179 வரை அரசு அதிகாரிகளின் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் 4 ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டரின் வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.