அகமதாபாத்: இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அகமதாபாத்தில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா – பிரிட்டன் இடையே ராணுவம், வர்த்தகம், மக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது. இதை மேலும் அதிகரித்து இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். லண்டனில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திற்கு நேற்று அவர் வந்தார். அவரை குஜராத் ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர பட்டேல் ஆகியோர் வரவேற்றனர். குஜராத்துக்கு பிரிட்டன் பிரதமர் ஒருவர் வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.முதல் நிகழ்ச்சியாக நேற்று போரிஸ் ஜான்சன் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி காந்தி ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு ஆசிரமத்தை சுற்றிப் பார்த்தார்.அங்குள்ள மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அந்த ஆசிரமத்தில் காந்தி பயன்படுத்திய பொருட்களை வியப்புடன் பார்த்தார். பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் காந்தியவாதிகளின் அடையாளமாக கருதப்படும், கை ராட்டையை சுழற்றி நூல் நூற்றார். அப்போது ராட்டை குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியை சந்தித்து பேசினார். இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் வகையில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதுகாப்பு துறையில் கூட்டு ஒப்பந்தம் அமைப்பது தொடர்பாக போரிஸ் ஜான்சனுடன் அதானி ஆலோசனை நடத்தினார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும், பின்னர் பிரதமர் மோடியையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் இந்தியா வந்தபோது விமானத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, விசா பெறுவதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் பிரிட்டனுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்வது பற்றிய இந்தியாவின் கோரிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில் ‘‘பிரிட்டனில் ஐடி மற்றும் புரோகிராமிங் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான திறமையான ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். பிரிட்டனுக்கு இந்தியர்கள் வருவதை நான் ஆதரிக்கிறேன். தகுதி அடிப்படையில் இந்தியர்களுக்கு அதிக விசா வழங்க வேண்டும். அதில் சில கட்டுப்பாடுகளும் கொண்டுவர வேண்டும் என்று கருதுகிறேன்,’’ என்றார். கடந்த ஆண்டு கல்வி தகுதியின் அடிப்படையில் 67,839 இந்தியர்கள் பிரிட்டன் விசா பெற்றுள்ளனர். இது 2019ம் ஆண்டை ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகம்.