பெங்களூரு: கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகியவை வியூகம் வகுக்கும் பணிகளில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தள மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி நேற்று கூறியதாவது:
கர்நாடகாவில் மத அரசியலை தொடங்கி வைத்ததே காங்கிரஸ் தான். அவர்கள் அமைத்துக் கொடுத்த பாதையில் தான் பாஜக இப்போது மதவாத ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
எனது தலைமையிலான காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு சித்தராமையாவே காரணம். தனது ஆதரவு எம்எல்ஏ.க்களை பாஜகவுக்கு அனுப்பி, அவர்கள் ஆட்சி அமைக்க மறைமுகமாக உதவினார்.
சித்தராமையாவுக்கும் பாஜக மேலிடத்துக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுகிறேன். வரும் தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.
மாநில நலனை காக்க மஜதவை ஆதரிக்க வேண்டும். 123 தொகுதிகளை கைப்பற்றி நாங்களே ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறினார்.