52 உதவி இயக்குனர்களுக்கு படவாய்ப்பு பெற்றுத் தரும் இயக்குனர்கள் சங்கம்

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு இயக்குனர் சங்கத்தின் நிர்வாகிகள் விறுவிறுப்பாக தங்கள் பணிகளை தொடங்கி உள்னனர். சங்கத்தில் உறுப்பினராக உள்ள துணை, இணை இயக்குனர்களில் திறமையானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு படம் இயக்கும் வாய்ப்பு பெற்றுத் தருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன் முதல்கட்டமாக தற்போது பெங்களூருவைச் சேர்ந்த இனோவேட்டிவ் பிலிம் அகாடமியுடன் இணைந்து 52 பேரை இயக்குனர்களாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான அறிமுக விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்மணி பேசும்போது “ஒரு காலத்தில் சினிமா கலைஞர்களின் கையில் இருந்தது. தற்போது வியாபாரிகளின் கையில் இருக்கிறது. அவற்றை மீட்டு கொண்டுவரவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக 195 கதைகள் கேட்கப்பட்டு அதில் 52 கதைகளை படமாக்க முடிவு செய்திருக்கிறோம். இதில் முதல்கட்டமாக பெங்களூரு இனோவேட்டிவ் பிலிம் அகாடமியுடன் இணைந்து 10 படங்களை தயாரிக்கிறோம். 4 படங்களில் பணி ஏற்கெனவே தொடங்கி விட்டது.

படம் இயக்க விருப்பம் உள்ள இயக்குனர்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் மனதில் உள்ள கதைகளை குறும்படமாக எடுத்து கொடுக்கலாம். குறும்படம் எடுக்கத் தேவையான கேமரா, லைட்டிங் உள்ளிட்ட வசதிகளை சங்கம் செய்து கொடுக்கும். தேவைப்பட்டால் நிதி உதவியும் தரும். எடுக்கும் குறும்படங்கள் தேர்வு கமிட்டியால் தேர்வு செய்யப்பட்டால் படமாக தயாரிக்கப்படும்.

இதுதவிர சினிமா துறையில் உள்ள மற்ற சங்க உறுப்பினர்களும் படம் இயக்கும் ஆர்வம் இருந்தால் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து ஒரு குறும்படம் எடுத்து தரலாம். இதற்காக ஒரு போட்டி நடத்துகிறோம். ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையிலான குழுவினர் சிறந்த குறும்படங்களை தேர்வு செய்வார்கள். அதில் தேர்வாகும் முதல் 3 படங்கள் தயாரிக்கப்படும். என்றார்.

இந்த அறிமுக விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, செயலாளர் மன்னன், இயக்குனர் சங்க செயலாளர் ஆர்.வி. உதயகுமார், துணை தலைவர் ரவிமரியா, பொருளாளர் பேரசு, இசை அமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தினா, ஒளிப்பதிவாளர்கள் சங்க செயலாளர் இளவரசு, நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.