சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஆளுநரிடமிருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக முந்தைய அதிமுக அரசுஅமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது.
நீண்ட காலமாக அந்தத் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததால், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனவும், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் இருக்கும் ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வநதபோது, தமிழக அரசுத் தரப்பில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களையும் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,எந்த தேதியில் ஆளுநர், இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் என தெரிவிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ல் ஆளுநர் அலுவலகத்திலிருந்து விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், “நளினியின் மரண தண்டனை தமிழக அரசாலும், பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனை உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாகவும் மாற்றப்பட்டது. அரசால் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட தன்னை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்த பிறகு, அதற்கு ஒப்புதல் அளிக்காமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாளும் சட்டவிரோத காவலில் இருப்பதாகத் தான் கருத வேண்டும்.
மேலும், தடா சட்டப் பிரிவுகளின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டதால், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ள நிலையில், இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தடா சட்டப்பிரிவுகளின் கீழ் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் நளினி உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாரா என்பது குறித்து விளக்கமளிக்க நளினி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 25-ம் தேதி தள்ளிவைத்தனர்.