விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் விவகாரத்தில் பிரிட்டன் நீதிமன்றம் இறுதி முடிவை தெளிவாக அறிவித்துவிட்டது. லண்டன் நீதிபதி அளித்த தீர்ப்பில், உளவு பார்த்த குற்றச்சாட்டை சுமந்திருக்கும் ஜூலியன் அசாஞ்சே, அந்த விவகாரத்தை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறார்.
விக்கிலீக்ஸ் (Wikileaks) நிறுவனர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மோதல்கள் தொடர்பான நூறாயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக அமெரிக்காவில் தேடப்பட்டு வருகிறார்.
தன்னை அமெரிக்காவுக்கு அனுப்புவதை தடுக்க அசாஞ்சே பல ஆண்டுகளாக முயன்று வருகிறார். இதற்கான அவரது நீதிமன்ற போராட்டங்களுக்கு முடிவு வந்துவிட்டது. ஜனவரி 2021 இல், அசாஞ்சேவின் வழக்கில் தீர்ப்பளித்த ஒரு மாவட்ட நீதிபதி, அவர் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டால், தற்கொலை செய்துகொள்ளும் அபாயத்திற்கு தள்ளப்படுவார் என்று கூறி, அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவதைத் தடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்
அந்த தீர்ப்புக்கு அமெரிக்கா மேல்முறையீடு செய்திருந்தது. மேல்முறையீட்டில் பிரிட்டனின் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு அனுப்புகிறது.
மேல்முறையீட்டு வழக்கில் அசாஞ்சேயின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இங்கிலாந்தின் உயர் நீதிமன்றத்தால் அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் முடிவை சவால் செய்ய முடியாது என்று கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது.
ஜூலியன் அசான்ஜின் பின்னணி என்ன, அவர் செய்த தவறுகள் என்ன?
ஜூலியன் பால் அசாஞ்சே ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகையாளர், வெளியீட்டாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார், அவர் 2006 இல் விக்கிலீக்ஸ் என்ற வலைத்தளத்தை தொடங்கினார்.
கடந்த 2010ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா நடத்திய தாக்குதல், போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், உளவு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு ராணுவ ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். அவர் வெளியிட்ட தகவல்கள் உலக நாடுகளிடையே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | உக்ரைனின் லிவிவ் நகரில் ரஷ்யாவின் சக்திவாய்ந்த ஏவுகணை தாக்குதலில் 7 பேர் பலி
அமெரிக்க இராணுவ உளவுத்துறை ஆய்வாளர் செல்சியா மானிங் வழங்கிய கசிவுகளை தொடர்ந்து வெளியிட்டு சர்வதேச கவனத்தைப் பெற்றது. இதையடுத்து, உளவு பார்த்தல் உள்பட 18 வழக்குகளை அசாஞ்சேவுக்கு எதிராக பதிவு செய்த அமெரிக்கா, அவரை விசாரணைக்காக அமெரிக்காவுக்கு கொண்டுவர தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அவருக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் ஜூலியன் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டது. ஸ்வீடன் நாட்டில் தஞ்சம் புகுந்த அவரை, விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா ஸ்வீடன் நாட்டிற்கு நெருக்கடிகளை தந்தது. அதையடுத்து, 2012ஆம் ஆண்டு ஸ்வீடனில் இருந்து தப்பி சென்ற ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் (London) உள்ள ஈகுவடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.
ஆனால், 2019ஆம் ஆண்டில் ஈகுவடார் தூதரகத்தில், பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜீலியன் அசாஞ்சே, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலியன் அசாஞ்சேவை, விசாரணக்காக நாடு கடத்த வேண்டும் என இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்தது அமெரிக்கா. ஆனால், இதை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் ஜூலியன் அசாஞ்சே (Julian Assange) மனுத்தாக்கல் செய்தார்.
விசாரணை, தீர்ப்பு, தீர்ப்புக்கு மேல்முறையீடு என அசாஞ்சேவின் சட்ட போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார். அமெரிக்கா, அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அசாஞ்சேவுக்கு 175 ஆண்டுள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?