கோலாலம்பூர் : இந்தியாவை பூர்வீகமாக உடைய நாகேந்திரன் தர்மலிங்கம், 34, ஆசிய நாடான மலேசியாவின் இபோ நகரில் வசித்து வந்தார். அவர், ‘ஹெராயின்’ போதைப் பொருளை கடத்தியதாக, ஆசிய நாடான சிங்கப்பூரில், 2009ல் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் சட்டத்தின்படி, போதைப் பொருள் கடத்தியதற்காக, அவருக்கு மரண தண்டனை விதித்து, 2010ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், 2011ல் தள்ளுபடி செய்யப்பட்டன. ‘நாகேந்திரனுக்கு 34 வயதானாலும், 18 வயது உடையோருக்கான மூளை வளர்ச்சியை பெற்றுள்ளார்’ என குறிப்பிட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும்படி, வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், 2017ல், சிங்கப்பூர் உயர் நீதிமன்றம், இதை நிராகரித்தது.
சிங்கப்பூர் சிறையில் உள்ள அவருக்கு, மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக, சிங்கப்பூர் சிறை நிர்வாகம், கடந்தாண்டு ஆக.,ல், நாகேந்திரனின் பெற்றோருக்கு கடிதம் எழுதியது.இது, சமூக வலை தளங்களில் வெளியானதை அடுத்து, அவருக்கு கருணை காட்டும்படி, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
ஆனால், சிங்கப்பூர் நீதிமன்றம், சமீபத்தில் இதையும் நிராகரித்தது. இதையடுத்து, வரும், 27ம் தேதி துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக, நாகேந்திரனின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement