அரசு கல்லூரி விடுதிகளில் இணைய வழி நூலகம் அமைக்கப்படும்- அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை:

சட்டசபையில் இன்று, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலன் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

275 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் இணைய வழி நூலகம் E-Library அமைக்கப்படும்.

கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்,
மின்நூல்களை இணைய வழியில் படிப்பதற்கு ஏதுவாக ஒரு நூலகத்திற்கு ரூ. 80,000 செலவில் 275 கல்லூரி விடுதிகளுக்கு 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கணினி மற்றும் இதர உபகரணங்கள் வழங்கப்படும்.

மாணவ, மாணவியர் குறைவாக உள்ள பள்ளி விடுதிகளை மறுசீரமைத்து, தேவைப்படும் இடங்களில் 15 கல்லூரி விடுதிகள் 1 கோடியே 48 லட்சத்து
5 ஆயிரம் ரூபாய் செலவில் துவக்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவியர் கல்லூரிகளில் அதிக அளவில் சேர்ந்து கல்வி பயிலவேண்டும் என்பதற்காக, பள்ளி மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியர் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். இதற்கென 48 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

சொந்த கட்டடம் முற்றிலும் பழுதடைந்ததால் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் 2 விடுதிகளுக்கு 6 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும்.

மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள மூன்று கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் 1 கோடியே 17 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் உண்டு உறைவிடப் பள்ளிகள் துவங்கப்படும்.

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 2 கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக 1 கோடியே 34 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்படும்.

சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களை மேம்படுத்துவதற்காக, 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 நவீன முறை சலவையகங்கள் துவங்க தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் இதர செலவுகளுக்கு 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்கள் 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 ஆயத்த ஆடை அலகுகள் (Readymade Garments Units) 75 லட்சம் ரூபாய் செலவில் அமைத்துத்தரப்படும்.

11ஆம் வகுப்பு பயிலும் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணவ, மாணவியரை மாநில அளவில் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு 49 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் 3 முறை இலவச மருத்துவப் பரிசோதனை செய்வதற்கென வழங்கப்பட்டு வரும் இடைநிகழ் செலவினம் ரூ.1,000-லிருந்து, ரூ.3,000 ஆக 32 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்..
.பாலிடெக்னிக் கல்லூரியை நிரப்புவதற்காகவே நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது- அமைச்சர் பொன்முடி தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.