அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கண்காணிப்பை தீவிரப்படுத்தி, நாள்தோறும் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில், மூன்று நாட்களுக்கு மேலாக அழுகிய நிலையில் கேட்பாரற்று கிடந்த சிவபாக்கியம் என்ற பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
நாள்தோறும் 350க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனையில், அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் இருந்தே அரசு மருத்துவமனைகளின் லட்சணம் தெளிவாகிறது.
10 ஆண்டுகளில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் 10 மாதத்தில் செய்வதாக இந்த அரசு கூறி வரும் நிலையில், சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மருத்துவமனையின் இந்த நிலையை எண்ணி பார்க்கும்போது அரசின் நிர்வாகம் உண்மையிலேயே செயல்படுகிறதா என மக்கள் மனதில் கேள்வி எழும்புகிறது.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற கவன குறைவு இன்றி, மக்களை பாதுகாக்கும் அரசாக செயல்பட வேண்டும். இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட, மருத்துவர்கள் முதல் மருத்துவமனை ஊழியர்கள் வரை கண்டறிந்து, உயர்மட்ட விசாரணை மேற்கொண்டு, கவனக்குறைவாக செயல்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கண்காணிப்பை தீவிரப்படுத்தி, நாள்தோறும் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.