தெருநாய்கள் மீது அன்பு செலுத்தி, எட்டு ஆண்டுகளாக உணவளித்து வருகிறார், அயனாவரத்தை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் சித்ரா, 48. அவர் கூறியதாவது: எல்லா உயிர்களுக்கும் பொதுவானது, பசி. 15 ஆண்டுகளுக்கு முன், என் வீட்டில் ‘போமேரியன்’ நாய் வளர்த்தேன். அது, எட்டு ஆண்டுக்கு முன் இறந்தது. அதன் நினைவாக, தெருநாய்களுக்கு சேவை செய்யும் எண்ணம் வந்தது.
2014ல் இருந்து, தொடர்ந்து, எட்டு ஆண்டுகளாக அயனாவரத்தை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறேன். அத்துடன், அவற்றிற்க்கான மருத்துவ சேவைகளும் செய்கிறேன். சென்னை மாநகராட்சியில் தன்னார்வலராகவும், விலங்குகள் நல வாரியத்தில் உறுப்பினராகவும் உள்ளேன். தெரு நாய்கள் பெருக்கம், எல்லாருக்கும் பிரச்னை தான். எனவே, 100க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளேன்.நாய்களின் உணவுக்காக மாதம் 15 ஆயிரம் வரை செலவாகும். என் கணவர் மற்றும் நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன், தொடர்ந்து நாய்களுக்கு பசியாற்றி வருகிறேன். பல இடங்களில் இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். உணவு கிடைப்பதால், அப்பகுதியிலேயே தெரு நாய்கள் சுற்றிவருவதாகவும், அவற்றால் பிரச்னைகள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
தெருநாய்களுக்கு உணவு, தண்ணீர் இல்லை என்றால், அதன் உடல்நிலை மாறுபட்டு, அது ஆக்ரோஷமாக மாறுகிறது. இதனால் தான், பாதசாரிகளை துரத்துவது, கடிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, நாய்களின் பசியை போக்குவதே முக்கியம். என்னை பொறுத்தவரை, அரசே முன்வந்து, தெரு நாய்களுக்கு முகாம்கள் அமைத்துபாராமரிக்க வேண்டும். தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைக்க, அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து, நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு உணவு வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
Advertisement