கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி, கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையில் கண் பார்வை பெற்றது குறித்து, குஜராத்தில் நடந்த ஆயுஷ் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமைபட பேசினார்.
#Ayurveda
#PMModi
#RosemaryOdinga
இழந்த
பார்வையை
மீட்டு தந்தது
இந்தியா!
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளத்தில் உள்ளது ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்.
அறுவை சிகிச்சை
இங்கு, இரண்டரை வருடங்களுக்கு முன், கண் சிகிச்சை பெற வந்திருந்தார், கென்யா நாட்டின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி.அவருக்கு நடந்த ஒரு அறுவை சிகிச்சை காரணமாக, அப்போது பார்வை பறிபோயிருந்தது. ஸ்ரீதரீயம் கண் மருத்துவமனை தலைமை டாக்டர் நாராயணன் நம்பூதிரி தலைமையில் டாக்டர்கள் அளித்த சிகிச்சையில், அவரது பார்வை மேம்பட்டது.
மேலும், தொடர் சிகிச்சை பெற சில மாதங்களுக்கு முன், தந்தை ஒடிங்காவுடன் கூத்தாட்டுக்குளம் வந்திருந்தார் ரோஸ்மேரி. அவர் சிகிச்சையில் இருக்கும் போது, ஒடிங்கா டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, இந்திய மருத்துவ முறையின் சிறப்பு குறித்து, மகிழ்ச்சி தெரிவித்தார். இந்திய மருத்துவ முறையில் கென்யா மக்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுமாறும் மோடியை கேட்டுக் கொண்டார்.
மகிழ்வுடன் பகிர்வு
இதை நேற்று முன்தினம், குஜராத் காந்தி நகரில் சர்வதேச ஆயுஷ் மாநாடு நடந்த போது, பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். மாநாட்டில், வெளிநாட்டு பார்வையாளராக ரோஸ்மேரியும் பங்கேற்றார்.பிரதமர் மோடி பேசியதாவது: என் நண்பர் கென்யா முன்னாள் பிரதமர் ஒடிங்கா என்னை சமீபத்தில் சந்தித்தார். அவரது மகளுக்கு மூளையில் ஏற்பட்ட பிரச்னையால் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் கண் பார்வை பாதித்து, உலகில் பல பகுதிகளிலும் சிகிச்சை பெற்றிருக்கிறார்.
பார்வை போனால் நாம் படும் சிரமம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. மகளின் பார்வை போனதால் மிகவும் வருத்தமடைந்திருந்த அவர், நம் மருத்துவ முறைகளை அறிந்து, ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்தார். சிகிச்சையில் முற்றிலும் குணமானதால் நன்றி தெரிவிக்க என்னை சந்தித்தார்.
மகளுக்கு பார்வை கிடைத்த அந்த பொன்னான நேரத்தை என்னிடம் மகிழ்வுடன் பகிர்ந்தார். இவ்வாறு பேசிய மோடி, ‘ரோஸ்மேரி ஒடிங்கா… நீங்கள் இங்கு உள்ளீர்களா’ எனக் கேட்டார். அப்போது, பார்வையாளர்கள் வரிசையில் இருந்த ரோஸ்மேரி நெகிழ்ச்சியுடன் எழுந்து நின்றார். அவரை அவையினருக்கு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
பார்க்க முடிகிறது
கூட்டம் முடிந்த பின், ரோஸ்மேரி பிரதமரை சந்தித்து நன்றி கூறினார். சிகிச்சை அளித்த தலைமை டாக்டர் நாராயணன் நம்பூதிரியும் மாநாட்டில் பங்கேற்றனர்.
அவருக்கும் நன்றி தெரிவித்த ரோஸ்மேரி, நிருபர்களிடம் கூறுகையில், ”சீன மருத்துவ முறை உட்பட பல வழிகளில் சிகிச்சை பெற்றும், எனக்கு கண் பார்வை சரியாகவில்லை. ஆயுர்வேத மருத்துவத்தால் இப்போது என்னால் நன்றாக பார்க்க முடிகிறது,” என்றார்.நேற்றைய மாநாட்டில், ஆயுஷ் மருத்துவ மாணவர்கள், ஆசிரியர்களுடன் டாக்டர் நாராயணன் நம்பூதிரி கலந்துரையாடினார்.
– நமது நிருபர் –