கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஒருபுறம் சென்னையில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றால், மறுபுறம் டெல்லியில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் அமலாக்கத்துறை டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்துகிறது. இப்படி சசிகலா, டிடிவி தினகரன் மீள முடியாத விசாரணை நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து விடுதலையாகி வந்த பிறகு, அதிமுகவைக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடம் போனில் பேசிய ஆடியோவை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சசிகலா அதிமுகவை மீட்க தொண்டர்களை சந்திக்கப் போவதாக அறிவித்து சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் சேர்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதில் உறுதியாக உள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை அதிமுக பொதுக்குழுவால் நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு சசிகலாவை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல் முறையீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் இன்று (ஏப்ரல் 22) 2வது நாளாக விசாரணை நடத்தினர். அதே நேரத்தில், அமமுக பொதுச் செயலாலர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை டிடிவி தினகரனை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்தது. டிடிவி தினகரன் டெல்லி சென்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விசாரணையில் பதில் அளித்து வருகிறார்.
ஒருபுறம், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், சசிகலாவிடம் தனிப்படை போலீசார் சென்னையில் இன்று 2வது நாளாக விசாரனை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் மறுபுறம், டெல்லியில் அமலாக்கத்துறை டிடிவி தினகரனிடம் விசாரனை நடத்துகிறது. இப்படி, இங்கே சசிகலா, அங்கே டிடிவி தினகரன் என மீள முடியாத விசாரணை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சசிகலா மீது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இவரிடம் 6 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 200 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அதிகாரிகள் சசிகலாவிடம் 6 மணி நேரம் தொடர்ந்து கேள்விகளை கேட்டு விசாரித்துள்ளனர்.
சசிகலாவிடம் சென்னையில் தி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று 2வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”