மாஸ்கோ: உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி உள்ளது.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய ராணுவம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் ராணுவ தரப்பில் 4,000 பேர் உயிரிழந்தனர். 1,478 பேர் சரண் அடைந்தனர். தீவிர போருக்குப் பிறகு மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் நேற்று கைப்பற்றியது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கே சொய்குவும் காணொலி வாயிலாக நேற்று பேசினர். அப்போது அமைச்சர் சொய்கு கூறும்போது, “உக்ரைனின் மரியுபோல் நகரம் விடுதலை பெற்றுவிட்டது” என்று தெரிவித்தார்.
அதிபர் புதின் பேசும்போது, “ரஷ்ய படைகளுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. அங்குள்ள தொழிற்பேட்டையில் பதுங்கியிருக்கும் வீரர்கள் சரண் அடைய வேண்டுகிறேன். இனி ஒரு ஈ கூட தப்பி செல்ல முடியாது. எனினும் அந்த தொழிற்பேட்டை மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ரஷ்ய படைக்கு உத்தரவிட்டுள்ளேன். அதேநேரத்தில் அங்கிருந்து யாரும் தப்பி செல்ல அனுமதிக்க கூடாது. குறிப்பாக வான்வெளியை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
கடந்த 2014-ம் ஆண்டில் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது. ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சி படைகள் கிழக்கு உக்ரைனில் ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றன. கிரிமியாவுக்கும் கிழக்கு உக்ரைனுக்கும் நடுவே மரியுபோல் நகரம் அமைந்துள்ளது.
இது அந்த நாட்டின் 10-வது மிகப் பெரிய நகராகும். பூகோள ரீதியாக முக்கியத்துவம் பெற்ற இந்த நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியிருப்பதால் கிரிமியாவில் இருந்து கிழக்கு உக்ரைன் பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும்.
உக்ரைன் அரசு செய்தித் தொடர்பாளர் போடோலாக் நேற்று கூறும்போது, “மரியுபோல் நகரில் சுமார் ஒரு லட்சம் பேர் சிக்கியுள்ளனர். அவர்களை ரஷ்யா விடுவிக்க வேண்டும். அதற்குப் பதிலாக எங்களிடம் கைதிகளாக உள்ள ரஷ்ய வீரர்களை விடுதலை செய்ய தயாராக உள்ளோம்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து ரஷ்ய செய்தித் தொடர்பாளர் மரியா கூறும்போது, “மரியுபோல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம். இந்த நகரில் பிரிட்டன் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த பல வீரர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர்” என்று தெரி வித்தார்.
ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அலெக்ஸி போலிஸ்சக் கூறும்போது, “உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா விரும்பவில்லை. நேட்டோ அமைப்பு உக்ரைனை காலனி நாடாக பயன்படுத்தியது. இதை முறியடிக்க உக்ரைனின் ராணுவ தளங்கள் அனைத்தையும் அழித்து வருகிறோம்” என்றார்.