ஜம்மு-வின் சுஞ்ச்வான் பகுதியில் இன்று அதிகாலை இரண்டு தீவிரவாதிகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இந்தியப் பிரதமர் மோடியைக் கொலை செய்ய வந்த தற்கொலைப்படையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 4:25 மணியளவில் சுஞ்ச்வான் ராணுவ முகாமை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு தீவிரவாதிகளைக் கண்ட எல்லை பாதுகாப்புப் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் சி.ஐ.எஸ்.எஃப் உதவி சப்-இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட்டார், அதேபோல ஒன்பது பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் யூ.டி காவல் ஆணையர் தில்பாக் சிங், “பாகிஸ்தானின் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது-ன் தற்கொலைப் படையின் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை நாசப்படுத்துவதற்கான பெரிய சதியாக இருக்கலாம்” எனக் குறிப்பிட்டார்.
வரும் ஏப்ரல் 24-ம் தேதி பிரதமர் மோடி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி சம்பாவின் பாலி கிராமத்திற்குச் சென்று உரையாற்றவிருக்கிறார். பிரதமரின் வருகையைக் கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போலீஸாரின் முதற்கட்ட அறிக்கையின்படி அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்றும், ஜம்மு காஷ்மீரில் அவர்களுக்கு இதற்கு முன்னர் பயங்கரவாத நடவடிக்கைகளில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது.