இரு நாடுகளிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த திட்டம் – பிரதமர் மோடியுடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்து பேசினார். அப்போது 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தீபாவளிக்கு முன்பாக இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இந்தச் சூழலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். முதல் நாளில் அவர் குஜராத்தில் சுற்றுப் பயணம் செய்தார். 2-வது நாளான நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, பொருளாதாரம், அணுசக்தி, பருவநிலை மாறுபாடு, சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது: எனது மிகச் சிறந்த நண்பர் நரேந்திர மோடி. இந்தியாவில் தங்கியிருந்த 2 நாட்களும் மிக அருமையாக இருந்தது. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் சட்டரீதியான பாதுகாப்பு உள்ளது. சில மனித உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்து நட்புரீதியாக ஆலோசித்தோம். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத குழுக்கள் பிரிட்டனில் செயல்பட அனுமதிக்க மாட்டோம்.

வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி, விஜய் மல்லையாவை நாங்கள் வரவேற்கவில்லை. அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப பிரிட்டன் அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துவிட்டது. எனினும் சில சட்டரீதியான சிக்கல்கள் எழுந்துள்ளன. இருவரையும் இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இரு நாடுகளின் பாதுகாப்பு உறவு மேலும் வலுப்படுத்தப்படும். நிலம், கடல், விண்வெளி, சைபர் பாதுகாப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் போர் விமானங்களின் உற்பத்திக்கு தேவையான உதவிகளை வழங்குவோம். இதேபோல இந்திய பெருங்கடலில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தேவையான தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவோம்.

இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வரும் தீபாவளிக்கு முன்பாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கிறேன்.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மதிக்கிறோம். உக்ரைனின் புக்சா நகரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்ததை வரவேற்கிறோம். உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சமரசத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இதில் ரகசியம் எதுவும் இல்லை. ரஷ்யா, உக்ரைன் தலைவர்களுடன் அவர் பலமுறை தொலைபேசியில் பேசியிருக்கிறார். உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது.

இவ்வாறு போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

உக்ரைனில் அமைதி

பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இந்தியா, பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் இரு நாடுகளும் தீவிரமாக உள்ளன. இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இதேபோல பிரிட்டன் உடனான ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறேன்.

பாதுகாப்புத் துறையில் இந்தியாவும், பிரிட்டனும் இணைந்து செயல்படும். பாதுகாப்பு துறை சார்ந்த இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் தொழில்நுட்ப உதவிகளை வழங்க பிரிட்டன் முன்வந்திருப்பதை வரவேற்கிறேன்.

உக்ரைனில் உடனடியாக சண்டை நிறுத்தம் அமலுக்கு வரவேண்டும். அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. உக்ரைனும் ரஷ்யாவும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு மோடி தெரிவித்தார்.

புதுமை கண்டுபிடிப்பு திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திப்பின்போது 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் முக்கியமாக இந்திய அணுசக்தி துறை, பிரிட்டன் எரிசக்தி துறை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, ஹரியாணாவின் ஜாஜார் பகுதியில் செயல்படும் அணுசக்தி பங்களிப்புக்கான சர்வதேச மையத்துக்கு தேவையான உதவிகளை பிரிட்டன் வழங்கும்.

மத்திய வெளியுறவுத் துறை, பிரிட்டன் காமன்வெல்த் மேம்பாட்டு அலுவலகம் இடையே மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி இரு நாடுகளும் இணைந்து சர்வதேச புதுமை கண்டுபிடிப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இவை தவிர மேலும், 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்திய தடுப்பூசி

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய மருந்து உற்பத்தி துறையை வெகுவாக புகழ்ந்தார். உலகத்தின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரா ஜென்கா மற்றும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஒன்றிணைந்து கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியை தயாரித்து வருகின்றன. இவ்விரு நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை தான் செலுத்தியிருப்பதாக போரிஸ் ஜான்சன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.