தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி வரும் மே மாதம் 10-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் அனைத்துத் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். இன்று சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் உதயநிதியின் பேச்சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், “சென்ற முறை நான் பேசியபோது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார். தற்போது அவையில் இருப்பதற்கு நன்றி. எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் வெளிநடப்பு செய்தாலும் என் காரில்தான் ஏற முயல்கிறார். இ.பி.எஸ் எனது காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். ஆனால் எனது காரை எடுத்துக்கொண்டு கமலாலயமான பா.ஜ.க அலுவலகம் மட்டும் சென்று விடாதீர்கள்.
நீங்கள் மட்டுமல்ல… நானும் மூன்று நாள்களுக்கு முன்பு உங்கள் காரில் ஏற முயன்றேன்” எனக் கூற சபையே சில நிமிடங்கள் கலகலப்பானது. இதைத் தொடர்ந்து. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தின் ஆணையராக மாற்றுத்திறனாளியை நியமிக்க வேண்டும்.18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகள் அனைவருக்கும் மாத உதவித்தொகை வழங்க வேண்டும். திருநங்கைகளை கோயில்களில் பணியமர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், “உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என்றார்.
எடப்பாடி பழனிசாமி தொடர்பான உதயநிதியின் பேச்சுக்கு பதிலளிக்கும்விதமாகப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “எப்போதும் அ.தி.மு.க-வினர் கார்கள் எம்.ஜி.ஆர் மாளிகைக்கு மட்டுமே செல்லும்” என்று கூறினார்.