பெர்லின்:
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரில், சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டதாக தோன்றுகிறது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் கூறி உள்ளார்.
இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைய தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
உக்ரைனில் ரஷிய படைகள் கண்மூடித்தனமாக ஷெல் மற்றும் குண்டுகளை வீசி தாக்கியதில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டுள்ளன. இவை போர்க்குற்றங்களுக்கு இணையான நடவடிக்கைகள் ஆகும்.
பிப்ரவரி 24ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 5,264 பொதுமக்கள் உயிரிழப்பு தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அமைப்பினால் சரிபார்க்கப்பட்டது. அதில் 92.3 சதவீத இறப்புகள், உக்ரைன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மரியுபோல் போன்ற உக்கிரமான சண்டை நடக்கும் பகுதிகளில் உள்ள பயங்கரங்கள் வெளிச்சத்திற்கு வருவதால், உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்கிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் மிச்செலி. சர்வதேச மனிதாபிமான சட்டம் வெறுமனே புறக்கணிக்கப்படவில்லை, ஆனால் தூக்கி எறியப்பட்டதுபோல் தோன்றுகிறது என்றும் அவர் கூறி உள்ளார்.