ஜாபோர்ஜியா :உக்ரைனின் மரியுபோல் நகரில் அதிக எண்ணிக்கையிலான கல்லறைகள் கட்டப்பட்டுள்ளது செயற்கைக்கோள் படத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. இதில் 9000க்கும் மேற்பட்ட மக்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தப் போரில் இருதரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே ரஷ்ய படையினர் நாட்டின் கிழக்கு பகுதிகளில் ஏவுகணைகளை வீசி வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மரியுபோல் நகரின் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் படங்களில் மரியுபோலின் புறநகரில் 200க்கும் அதிகமான பெரிய அளவிலான கல்லறைகள் தென்படுகின்றன. இதுகுறித்து மரியுபோல் மேயர் வாடிம் பாய்சென்கோ நேற்று கூறுகையில் “மரியுபோலில் 9000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். ரஷ்ய படையினர் லாரியில் சடலங்களை ஏற்றி வந்து குழிகளில் கொட்டி புதைத்துள்ளனர்” என்றார்.இதை மறுத்து ரஷ்யா தரப்பில் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
Advertisement