புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் துறவிகள், புரோகிதர்கள், பூசாரிகளுக்காக நலவாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் கூடிய அமைச்சரவையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, உ.பி.,யின் இந்த நலவாரியம் சார்பில் அம்மாநிலத்திலுள்ள மடங்களில் வாழும் துறவிகள், தெய்வீக நகரங்களில் வாழும் புரோகிதர்கள் மற்றும் கோயில்களின் பூசாரிகள் ஆகியோரில் வயது முதிர்ந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
புரோகிதர் மற்றும் கோயில்களின் பூசாரிப் பணியில் உள்ளவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட உள்ளது. இத்துடன் இதர சலுகைகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், உ.பி.,யில் பேசப்படும் இந்தி, உருது, போஜ்புரி, அவதி, கடிபோலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைப் பேணிக் காத்து வளர்க்க தனித்தனியாக அம்மொழிகளுக்கான அகாடமியும் அமைக்க முடிவு எட்டப்பட்டது.
ஆன்மிகப் பஜனை மற்றும் கீர்த்தனைகளுக்காக இம்மாநிலத்தின் தெய்வீக நகரங்களான மதுரா, வாரணாசி, அயோத்தியா மற்றும் கோரக்பூரில் பயிற்சி நிலையங்களும் நிறுவ முடிவு செய்யப்பட்டது.
உ.பி.,க்கு சுற்றுலாவாசிகளைக் கவர ராமாயணம், மகாபாரதம், சூஃபி, பெளத்தம் மற்றும் சுதந்திரப் போராட்டங்கள் சார்ந்த 12 வகைகளிலான சுற்றுலாத் தலங்கள் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
உ.பி.யின் 75 மாவட்டங்களில் சுற்றுச்சூழல் கிராம சுற்றுலா பிரிவுகளும் புதிதாக உருவக்கப்பட உள்ளன.
இவற்றில், மதுராவிலிருந்து பர்ஸானா, பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமம் மற்றும் ஜான்சி கோட்டையில் ரோப்வே கார்’ வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. உ.பி.,யிலுள்ள கோயில்களின் வரலாறு, ஆன்மிக நாட்குறிப்புகள் உள்ளிட்டவைகளுடன் சுற்றுலா இணையதளமும் உருவாக்கப்பட உள்ளன.
லக்னோ, லக்கிம்பூர் கெரி மற்றும் சோன்பத்ராவில் பழங்குடிகளுக்கான அருங்காட்சியகமும் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இத்துடன் மாநிலம் உருவானதை நினைவுகூறும் வகையில் `உத்தரப் பிரதேச நாள்’ ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத ஊர்வலங்களுக்கான விதிமுறைகள்: டெல்லியின் ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் கலவரம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே உ.பி.யில் பல்வேறு மதஊர்வலங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இவற்றில் கலவரங்கள் நடப்பதைத் தடுக்கவும் முதல்வர் யோகி தலைமையிலான அரசில் பல புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில், கலவரம் உள்ளிட்ட எந்தவிதமான இடையூறுகளும் பொதுமக்களுக்கு ஏற்படாது என எழுத்துமூலம் வாக்குறுதி அளிப்பவர்களுக்கே ஊர்வல அனுமதி அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில் எந்தவிதமான ஆயுதங்களையும் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. மீறி கொண்டு செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படவும் முடிவாகி உள்ளது. ஊர்வலத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கான நஷ்ட ஈடுகளை அதன் நிர்வாகிகளிடமே பெறவும் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.
அதேபோல், அஸான் எனும் பாங்கு முழக்கம் தொடர்பான ஒலிப்பெருக்கிகள் பிரச்சினையும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதிலும் மசூதி, கோயில் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ஒலிப்பெருக்கிகளையும் அவை எழுப்பும் ஓசைகளையும் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக ஒலிபெருக்கிகள் அமைக்கவும் தடை விதிக்கப்படுகிறது.