தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “உள்ளாட்சி அமைப்புகளை வலுசேர்க்கும் வகையான முதல்வரின் அறிவிப்பை நான் மனதார வரவேற்கிறேன். முதல்வரின் பார்வை ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர், ஊராட்சிமன்றத் தலைவர் வரை வந்திருக்கிறது. அந்த பார்வை சட்டமன்ற உறுப்பினர்கள் வரை வரவில்லை என்ற ஒரு ஆதங்கம் எல்லோரிடத்திலும் இருக்கிறது” என்று சிரித்தபடியே சொன்னார்.
தொடர்ந்து பேசியவர், “எனக்குக் கூட வேண்டாம். தேவைப்படும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் ஒரு கார் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும். அதைச் சிந்தித்து பரிசீலனை செய்யவேண்டும் என்பது என் வேண்டுகோள். எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் குறைந்தளவு வட்டியில்லாத கடனிலாவது கார் வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் பேசி முடித்தார். அடுத்ததாகப் பேசிய சபாநாயகர் அப்பாவு, “அப்படியே மத்திய அரசுகிட்டயும் கொஞ்சம் பரிந்துரை செஞ்சு பணத்தை வாங்கிக் கொடுத்திடுங்க” என்று சொன்னதும் சபையில் சிரிப்பொலி எழுந்தது.