பிஸ்கட் என்பது பார்ப்பதற்கு ஒரு பொருளாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் பல வெரைட்டிகள் உள்ளன. குக்கீஸ், க்ரீம் பிஸ்கட், ஹெல்த், குறைந்த விலை பிஸ்கட் எனப் பல பிரிவுகள் உள்ளன. கோலா போர்களைப் போல, பிஸ்கட் பிரிவில் நடக்கும் அடிதடிகளும் பெரியது. பிஸ்கட் பிரிவில் பிரிட்டானியாவின் பங்கு தவிர்க்க முடியாது. குட்டே, டைகர், 50:50, லிட்டில் ஹார்ட்ஸ் உள்ளிட்ட பல பிராண்டுகள் உள்ளன.
திசை திரும்பிய கவனம்…
இந்த நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக தலைமைப் பொறுப்பில் இருந்தவர் சுனில் அலோக். ஆனால், இவருக்கும் தலைவர் நுஸ்லி வாடியாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக 2003-ம் ஆண்டு இயக்குநர் குழுவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வினிதா பாலி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்.
வினிதா பாலி தலைமையேற்ற காலத்தில் நிறுவனத்தின் செயல்பாடுகளில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், நிறுவனத்தின் கவனம் வேறுபக்கம் திரும்பியது. பிஸ்கட் நன்றாக செயல்பட்டு வருவதால், சர்வதேச செயல்பாடு மற்றும் டெய்ரி உள்ளிட்ட இதர பிரிவுகளில் கவனம் செலுத்தியது. இதற்கான சில நிறுவனங்களில் கணிசமான பங்குகள் வாங்கப்பட்டன. ஆனால், இவை அனைத்தும் பெரிய வெற்றியை தரவில்லை. மாறாக, இந்தியாவில் செயல்பட்டுவந்த பிஸ்கட் பிரிவில் போட்டி அதிகரித்தது.
இந்தியாவில் உள்ள பிரிட்டானியா வெளிநாட்டில் கவனம் செலுத்தியது. ஆனால், வெளிநாட்டு பிராண்டுகள், இந்தியாவில் உள்ள மற்ற நிறுவனங்கள் பிஸ்கட் பிரிவில் கவனம் செலுத்தத் தொடங்கின. அதனால் பிஸ்கட் பிரிவில் பிரிட்டானியா பங்கு குறையத் தொடங்கியது.
பார்லி நிறுவனம் குறைந்த விலை பிஸ்கட்டில் கவனம் செலுத்தியது. இந்தப் பிரிவில் எந்த நிறுவனமும் நுழைய முடியாது. ஆனால், பிரிட்டானியா நடுத்தர மற்றும் ப்ரீமியம் பிஸ்கட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் இந்த பிரிவில் ஒரியோ, யுனிபிக் உள்ளிட்ட பல புதிய பிராண்டுகள் வந்தன. இந்த நிலையில், 2010-ம் ஆண்டு பிரிட்டானியாவைவிட பெரிய நிறுவனமாக பார்லி மாறியது.
வந்தார் வருண் பேரி…
பெப்சிகோ நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்தவர் வருண் பேரி. பிரிட்டானியா நிறுவனத்தை மீட்பதற்காக புதிய நபரைத் தேடிக்கொண்டிருந்தார் நுஸ்லி வாடியா. இருவரும் சந்திப்பதற்காக குறிக்கப்பட்ட நாள் அன்று வருணுக்கு அதிக காய்ச்சல். இருந்தாலும் சந்திப்பு நடந்தது. சந்திப்பு என்றவுடன் சில நிமிடங்கள் அல்ல. ஆறு மணி நேரத்துக்கு மேலாக இந்தச் சந்திப்பு நடந்தது. அதனை வருண் பிரிட்டானியா நிறுவனத்தில் இணைவதாக முடிவெடுக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக (COO) வருண் இணைந்தார். 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார்.
இவர் பொறுப்பேற்றுக்கொண்ட சமயத்தில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. அதனால் மக்கள் பிஸ்கட்டுக்கு செலவு செய்யும் தொகை மிகவும் குறைந்தது. மேலும், நிறுவனத்தின் லாப வரம்பு பாதிக்கப்பட்டது. தவிர உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் போட்டியும் இருந்தது. இத்தனையும் சமாளிக்க வேண்டும். அதே சமயம், பார்லே நிறுவனத்தையும் தாண்ட வேண்டும் என்பதுதான் இவர் பொறுப்பு ஏற்கும்போது இருந்த சூழல்.
உயர்ந்தது லாப வரம்பு…
பணவீக்கம் மற்றும் செலவுகள் காரணமாக நிறுவனத்தின் லாப வரம்பு 2012-ம் ஆண்டு சமயத்தில் 4.5% என்னும் அளவிலே இருந்தது. 2020-ம் ஆண்டு இந்த வரம்பு 21% என்னும் அளவில் உயர்ந்தது. பல காலாண்டுகளாக 15 சதவிகிதத்துக்கு மேல் இருந்தது. இவர் பொறுப்பேற்றவுடன் விற்பனைக் குழுவுடன் வழக்கமான சந்திப்பு நடந்தது. அந்தச் சந்திப்பில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் பேரி. இன்று முதல் நிறுவனத்தில் தள்ளுபடி, சலுகைகள் என எதுவும் கிடையாது என அறிவித்தார். வந்திருந்த அனைவருக்கும் மிகப்பெரிய ஷாக்.
தள்ளுபடி மற்றும் சலுகையைக் குறைத்தால் ஏற்கெனவே இருக்கும் நிலையைவிட கீழே சென்றுவிடுவோம் எனப் பணியாளர்கள் ஆலோசனை வழங்கினார்கள். ஆனால், முடிவு எடுத்தது. ஒருவேளை, நாம் தோற்றால் தோற்றதாகவே இருக்கட்டும் என தெரிவித்தார். இதன்மூலம் நிறுவனத்தின் லாப வரம்பு உயர்ந்தது.
அதே போல, பிரிட்டானியாவில் பல முக்கியமான பிராண்டுகள் இருந்தன. அனைத்துக்கும் தனித்தனி குழு செயல்பட்டு வந்தது. இதனை மாற்ற திட்டமிட்டார் வருண். எவை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதில் ஒரு குழு செயல்படும். மற்ற பிராண்டுகளுக்கு வேறு குழு செயல்படும். இதன்படி குட்டே, நியுட்டிரி சாய்ஸ், டைகர், 50:50 மற்றும் மாரிகோல்ட் உள்ளிட்ட ஐந்து பிராண்டுகளை மட்டுமே கவனிக்க சிறப்பு குழு நியமனம் செய்ததார். இந்தப் பிரிவுக்கு கூடுதல் முதலீடும் செய்யப்பட்டது.
பணியாளர்களுக்குப் புதிய பொறுப்பு…
இவர் தலைமைப் பொறுப்பு ஏற்றவுடன் நிறுவனத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பலர் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்கள். அதே சமயத்தில், முக்கியமான பிராண்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தத் திட்டமிட்டதால், பல பணியாளர்களுக்கு வேலைப்பழு குறைவாக இருந்தது. அதனால் விற்பனைப் பிரிவில் 1400 பணியாளர்கள் இருந்தனர். சுமார் 400 நபர்கள் வரை நீக்கம் செய்யப்பட்டர்.
நிறுவனத்தின் செயல்பாட்டை உயர்த்துவதற்குப் பணியாளர்களை நீக்குவது வழக்கமான யோசனை போல தெரியும். ஆனால், யாரும் செய்யாத ஒரு முக்கியமான வேலையை செய்தார் வருண் பேரி. பொதுவாக, ஒரு உயரதிகாரி புதிதாக நியமனம் செய்யப்பட்டால், அவரை சார்ந்த பலரும் அந்த நிறுவனத்துக்கு வருவார்கள். ஆனால், வருண் பேரி இதுபோல எதுவும் செய்யவில்லை.
நிறுவனத்தில் இருப்பவர்களைப் பதவி உயர்த்தி முக்கியமான பொறுப்புகளைத் தந்தார். அவர்களுக்குப் பயிற்சி வழங்கி அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்தினார். வெளியில் இருந்து வருபவர்களைவிட நிறுவனத்துக்குள் இருப்பவர்களே பதவி உயர்த்துவதன் மூலம் உடனடியாக பலன்களை எதிர்பார்க்கலாம் என்பது வருணின் திட்டம். அதேபோல, திறமையானவர்களாக இருக்கும்பட்சத்தில் வயதோ அல்லது தற்போதைய பதவியோ முக்கியமில்லை.
அதேபோல, குறைந்த விலையில் விற்கப்படும் பொருள்களில் பிரிட்டானியா பெரிதாக கவனம் செலுத்தவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் ரூ.5-க்கு பொருள்களை அறிமுகம் செய்யப்பட்டது. இதுவும் வளர்ந்துவரும் பிரிவாக மாறி இருக்கிறது.
டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் மட்டுமே எப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் பலன். ஆனால், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரிட்டானியாவின் நெட்வொர்க் மிகவும் குறைவு. பார்லே நிறுவனத்துடன் ஒப்பிட்டால் மிக மிகக் குறைவு. அதனால் வட மாநிலங்களில் நெட்வொர்க்கை உயர்த்தும் திட்டம் உருவாக்கப்பட்டது.
அதேபோல, கிராமபுரங்களில் நெட்வொர்க் குறைவாக இருந்தது. 2015-ம் ஆண்டு 7,000 டீலர்கள் என்னும் அளவில் இருந்தது. ஆனால், 2020 கோவிட் சமயத்தில் 19000 என்னும் அளவுக்கு உயர்ந்தது.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல, சில பிராண்டுகளுக்கு மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. அந்த பிராண்டுகளை மட்டுமே வைத்து அதிக விளம்பரம் எடுக்கப்பட்டது. பொறுப்பேற்ற சமயத்தில் வந்த ஐ.பி.எல். சினிமா நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்சராக பிரிட்டானியா இருந்தது.
2015-ம் ஆண்டு பார்லே நிறுவனத்தை விட பிரிட்டானியா 0.5 சதவீதம் அளவுக்கு கூடுதல் சந்தையை வைத்திருந்தது. இந்த இரு நிறுவனங்களுக்கு இடையேயான இடைவெளி அடுத்தடுத்த ஆண்டுகளில் உயர்ந்துகொண்டே வருகிறது.
முழுமையான உணவு நிறுவனம்
தற்போது பிரிட்டானியா நிறுவனத்தின் வருமானம் 80% அளவுக்கு பிஸ்கட் மூலமாக கிடைக்கிறது. இதனை 50 சதவிகிதமாகக் குறைத்துக்கொண்டு, இதர பிரிவுகளில் மூலம் வருமானத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக புதிய பிரிவுகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஒரு முழுமையான உணவு நிறுவனமாக மாறுவதற்குத் திட்டமிட்டுவருகிறது. 2009-ம் ஆண்டுக்குப்பிறகு எந்த விதமான நிறுவனங்களை பிரிட்டானியா வாங்கவில்லை. ஆனால், தற்போது இதற்கென ஒரு குழுவை அமைத்திருக்கிறது.
2014-ம் ஆண்டு 500 ரூபாய்க்குக் கீழே இருந்த பங்கின் விலை தற்போது 3,360 ரூபாய் என்னும் அளவில் வர்த்தகமாகிறது.
நிறுவனத்தில் எவ்வளவு சிக்கல் வேண்டுமானாலும் இருக்கட்டும், கொஞ்சம் மாற்றி யோசித்தால், தீர்வு கிடைக்கும்; அது நிறுவனத்துக்குத் திருப்புமுனையாகவும் அமையும் என்பதற்கு பிரிட்டானியா நிறுவனம் நல்லதொரு எடுத்துக்காட்டு!
திருப்புமுனை தொடரும்!