மும்பை:
நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு எதிராக சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்றபோது தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப்மாலிக் உடந்தையாக இருந்து உதவி செய்ததாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கருப்பு பண மோசடி வழக்கில் நவாப் மாலிக்குக்கு எதிராக 5,000 பக்கம் அளவிலான குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இதை அமலாக்கத்துறை தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நவாப்மாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார். ஜெயிலில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை மும்பை ஐகோர்ட்டு நிராகரித்து விட்டது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.