ஜெனீவா: உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான காலத்தில் உலகம் முழுவதும் 55.9 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தைவிட 24 சதவீதம் அளவுக்கு வைரஸ் பரவல் குறைந்திருக்கிறது. முந்தைய வாரத்தை ஒப்பிடும் போது உயிரிழப்பு 21 சதவீதம் குறைந்திருக்கிறது.
கடந்த வாரத்தில் தென்கொரியாவில் மிக அதிகபட்சமாக 9.72 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அதற்கு அடுத்து பிரான்ஸில் 8.27 லட்சம் பேரும் ஜெர்மனியில் 7.69 லட்சம் பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டனர். கடந்த வாரத்தில் மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 3,076 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் 1,784 பேரும், தென்கொரியாவில் 1,671 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 50.7 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை 62.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 9.9 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ரஷ்யா, தென் கொரியா, இத்தாலி, துருக்கி உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.