விருதுநகரில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதையொட்டி உள்ள நூலக அறையில் மருந்துப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. கடந்த சில நாள்களாக விருதுநகரில் கனமழை பெய்ததில் மருந்துப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையை ஒட்டியுள்ள வடிகாலில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தக் கழிவுநீர் மருந்துப் பொருள் இருப்பு வைக்கப்பட்ட அறையினுள்ளும் புகுந்துள்ளது. இதனால் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த மருந்துகளில், அட்டைப் பெட்டியில் இருந்த 11,000 இரும்புச்சத்து மாத்திரைகள் கழிவுநீரில் நனைந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் அறையைத் திறந்து பார்த்த மருத்துவப் பணியாளர்கள் கழிவுநீரால் இரும்புச்சத்து மாத்திரைகள் வீணானது குறித்து விருதுநகர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கலுசிவலிங்கத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவரது அறிவுறுத்தலின்பேரில், வீணாகிப்போன மருந்துகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், இந்த அறையில் இனி எந்த ஒரு மருந்துப் பொருளையும் இருப்பு வைக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கலுசிவலிங்கத்திடம் பேசினோம். “மருந்துப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் கழிவு நீர் புகுந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஆஸ்பத்திரியில் உள்ள மருந்து இருப்பு அறையில் போதிய இடவசதி இல்லாததால் அதன் அருகே பயன்படுத்தப்படாமல் இருந்த நூலக அறையை பயன்படுத்தி வந்தோம். கழிவுநீர் புகுந்ததில் ஸ்ட்ரிப் டைப்பில் உள்ள 11,000 இரும்புச் சத்து மாத்திரைகள் வீணாகிப் போயின. இவை அனைத்தும் அட்டைப்பெட்டியில் மிக பாதுகாப்பாக பேக்கிங்கில் இருந்தவை. கழிவுநீரால் மருந்து அட்டைப் பெட்டிகள் மட்டுமே நனைந்து துர்நாற்றம் வீசியது. மாத்திரைகளை பாதிக்கும் அளவுக்கு கழிவுநீர் உட்புகவில்லை.
இருப்பினும், நனைந்த மருந்து அட்டைப் பெட்டியில் இருந்த அனைத்து மாத்திரைகளுமே அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. தற்போது, பாதுகாப்பான இடத்துக்கு மருந்துப் பொருள்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அனீமியா குறைபாட்டுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் வழங்குவதற்காக அந்த இரும்புச்சத்து மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது வீணாகிப்போன மாத்திரைகள் குறித்து உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.