புதுடில்லி : கார்களில் பயணியர் பாதுகாப்பிற்காக ஆறு பைகள் பொருத்தும் உத்தரவை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
தற்போது, காரில் ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கு இரு காற்றுப் பைகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. விபத்தின் போது காற்றுப் பைகள் விரிவடைந்து ஓட்டுனரையும், பயணியையும் காக்கின்றன.இந்நிலையில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, காரின் பின் இருக்கையில் உள்ள பயணியருக்கும் நான்கு காற்றுப் பைகள் பொருத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது. ‘வரும் அக்.,1 முதல் விற்பனையாகும் கார்களில் ஆறு காற்றுப் பைகள் இருக்க வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான விதிமுறைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் முயற்சியில் சாலை போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.எனினும், இத்திட்டத்திற்கு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.
விலை உயர்ந்த கார்களில் ஏற்கனவே நான்கு காற்றுப் பைகள் பொருத்தப்படுகின்றன. இதை கட்டாயமாக்கினால் சிறிய கார்களின் விலை உயரும். அதனால் விற்பனை குறையும் என வாகன நிறுவனங்கள் கருதுகின்றன.
இதை மறுத்த மத்திய அரசு அதிகாரி ஒருவர், ‘கூடுதலாக நான்கு காற்றுப் பைகள் பொருத்துவதால், 6,000 ரூபாய்தான் செலவாகும்’ என தெரிவித்துள்ளார்.ஆனால் ‘குறைந்தபட்சம், 17 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவாகும்’ என, ‘ஜாடோ டைனமிக்ஸ்’ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement