கன்னியாகுமரி மாவட்டம் ஆமணக்குவிளை பகுதியைச் சேர்ந்த சுயம்புதாசன் என்பவரின் மகன்கள் லிங்கேஸ் (36), சதீஷ் (34). இவர்கள் சென்னை ஐ.டி. கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினீயர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து சொந்த ஊரான ஆமணக்குவிளையில் உள்ள கோயிலில் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக தங்களது காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சதீஷ் ஒட்டிச் சென்றார்.
அவர்கள், சாத்தூர் அருகே பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லிங்கேஷின் 3 வயது மகள் லியாஆதிராவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் லிங்கேஸ், சதீஷ், இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயப்பட்டவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.