இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன்று விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி ஜி.சுரேஷ் (28) அவரது நண்பர் விக்னேஷ் (25) இருவரையும் கடந்த 18 ஆம் தேதி புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, மருத்துவர்கள், விக்னேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்கள்.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் விக்னேஷ், காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கை காரணமாக காவல் நிலையத்திலேயே இறந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதுமட்டுமின்றி, விசாரணைக் கைதியின் உறவினர்கள் சுமார் 48 மணி நேரம் சட்டவிரோதமாக காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய அதிகாரிகளின் இந்த அத்துமீறிய நடவடிக்கை குறித்தும், வாலிபர் விக்னேஷ் மரணம் குறித்தும், உண்மை தன்மை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.