கொசப்பேட்டை என்று மருவி அழைக்கப்படும் குயவர் பேட்டையில் ஜாத்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது.இன்று மிகப்பெரிய நகரமாக உருவெடுத்துள்ள சென்னை, ஒரு காலத்தில் தனித்தனி கிராமங்களாக தான் இருந்தது.அப்போது அவர்களுக்கு என்று இருந்த தனி கிராம தேவதை, இப்போதும் தனித்துவமாக இருந்து அருள்பாலிக்கிறார்.
சென்னை, புரசைவாக்கத்தின் மத்திய பகுதியில் உள்ள பலராலும், கொசப்பேட்டை என்று மருவி அழைக்கப்படுகிறது குயவர் பேட்டை.இங்கு வசிப்போர் தங்கள் தெய்வமான ஆதி மொட்டையம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று, ஜாத்திரை திருவிழா என்ற பெயரில் அம்மனுக்கு விழா எடுத்து சிறப்பிப்பர்.விழாவிற்காக, அவரவர் வீட்டு வாசலில் அம்மன் உருவத்தை உருவாக்கி வைத்திருப்பர். பிரதான ஆதி மொட்டையம்மன் தேரில் உலா வந்து பக்தர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அம்பாளை பார்த்து அருள்பாலிப்பார்.ஆதி மொட்டையம்மன் வரும்போது, வழியெங்கும் தேங்காய் உடைத்து வரவேற்பர்; பலவித பலகாரங்கள் செய்து தானம் செய்வர்.கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இந்த விழா, இந்த ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிலர் வீட்டு வாசலில் அம்பாளை வைத்திருந்தனர். சிலர் கூட்டாக சேர்ந்து பிரமாண்டமான முறையில் அம்பாளை தெருமுனையில் வைத்திருந்தனர்.அம்பாள் புற்றில் இருந்து எழுந்திருப்பது போலவும், கண்களை மூடி மூடித் திறந்து அருள்பாலிப்பது போலவும் தொழில்நுட்பம் சார்ந்து வைத்திருந்தனர்.ஒரு வீட்டின் வாசலில், மண்பானைகளையே அம்பாள் போல வடிவமைத்து வைத்திருந்தனர். இவற்றை பார்ப்பதற்கும், ஆதிமொட்டையம்மனை தரிசிப்பதற்கும், சென்னையில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.அனைவருக்கும் அன்னதானமும், வளையல் உள்ளிட்ட பிரசாதமும் வழங்கப்பட்டன. நிறைவாக, அனைத்து அம்பாள்களையும் ஆதி மொட்டையம்மன் கோவில் குளத்திற்கு எடுத்துச் சென்று கரைத்ததுடன் விழா நிறைவு பெற்றது.
– நமது நிருபர் –
Advertisement