* விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை ஜூலையில் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே தனுஷிடமும் ஒரு ஒன்லைன் சொல்லி, நெல்சன் ஓகே வாங்கியதாகத் தகவல் கசிந்தது. இதுபற்றி நெல்சன் வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல் இதுதான். ”நெல்சன் ரஜினி 169 ஸ்கிரிப்ட் ஒர்க்கில் கவனம் செலுத்தி வருகிறார். ‘பீஸ்ட்’ படததில் ‘ஸ்கிரிப்ட்டில் அவர் கவனம் செலுத்தியிருக்கலாம்’ என்ற பேச்சு கிளம்பியது அவரை அப்செட் ஆக்கியிருக்கிறது. ரஜினி படத்தில் அந்த பேச்சு எழாத வகையில் படு சின்ஸியராக இன்னொரு முறை ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து வருகிறார். திரைக்கதையை முழுவதும் செதுக்கிய பின்னரே, படப்பிடிப்புக்குக் கிளம்புகிறார். ‘ரஜினி169’ஐ முடித்த பிறகே அடுத்த படம் குறித்து தெரிய வரும்.” என்கிறார்கள்.
* நடன இயக்குநர் பிருந்தா துல்கர் சல்மானை வைத்து ‘ஹே சினாமிகா’வை இயக்கியிருந்தார். இப்போது மீண்டும் டைரக்ஷனில் களம் இறங்குகிறார். ஹீரோ விஜய்சேதுபதியாம். பிருந்தாவின் கதையை கேட்டு, கால்ஷீட்டையும் கொடுத்துவிட்டார் விஜய்சேதுபதி. இதனை அடுத்து ‘ஒரு நல்லாநாள் பாத்து சொல்றேன்’ ஆறுமுககுமார் இயக்கத்தில் நடிக்கிறார் வி.சே.
* இப்போது அமெரிக்காவில் இருக்கும் கமல், சென்னை திரும்பியதும் ‘விக்ரம்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இசை வெளியீட்டை சென்னையில் நடத்துவதா? அல்லது துபாயில் நடத்தலாமா என ஆலோசித்ததில் துபாயை டிக் அடித்திருக்கிறார் கமல். துபாயில் பிரமாண்ட வெளியீடாக இருக்கப்போகிறது என்றும் அதை விஜய் டி.வி.யில் நேரடி ஒளிப்பரப்பும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம்.
* நடிகர் கருணாஸ், ‘சல்லியர்கள்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இப்போது அவர் ஹீரோவாக நடித்துள்ள ‘ஆதார்’ படத்தையும் பினாமி பெயரில் தயாரித்தார் எனத் தகவல்கள் கசிய, அதை மறுத்திருக்கிறார். ”படத்தின் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாரின் நண்பர்தான் ‘ஆதார்’ படத்தைத் தயாரிக்கிறார். ஆனால், நான்தான் பினாமி பெயரில் இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என தகவல்கள் பரவியிருக்கிறது. கூவம் என்றால் நாறும். அதிலும் கூவத்தூர் சம்பவத்திற்குப் பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் தவறு. அதே தருணத்தில் இவர்களை திருத்துவது என் வேலை அல்ல. அதற்கான கால நேரமும் எனக்கு இல்லை.” என்கிறார்.
* சின்னக் கலைவாணர் விவேகின் முதலாமாண்டு நினைவஞ்சலி சென்னையில் ஒரு ஹோட்டலில் நடந்தது. அங்குள்ள ஜிம்மில் மற்றும் நீச்சல்குளத்தில்தான் விவேக், ஃபிட்னஸ் விஷயங்களை செய்து வந்ததினால் அங்கே நிகழ்ச்சியை வைத்திருந்தார்கள். விவேக்கின் நினைவுகளைப் பகிர அவருடன் நடித்த நடிகர்கள், இயக்குநர்கள் என திரையுலகினர் பலருக்கும் அழைப்பு அனுப்பி வைத்தனர் எதிர்பார்த்தவர்கள் யாரும் வராமல் போனதில் பலரும் ஏமாற்றம். குறிப்பாக விவேக்கின் குடும்பத்தினர்கூட இதில் பங்கேற்கவில்லையாம்.
* சில்வர் ஜூப்ளி நாயகன் மைக் மோகன், இப்போது ஹீரோவாக ‘ஹரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே விஜய் 66-ல் அவரை விஜய்யின் அண்ணன் கதாபாத்திரத்திற்கு கேட்டதாகவும், அதில் நடிக்க சம்மதித்தகாகவும் கோடம்பாக்கத்தில் தகவல் கிளம்பியது. இதுபற்றி மோகனின் வட்டாரத்தில் விசாரித்தால், மறுக்கிறார்கள். ‘அண்ணன் ரோல், அப்பா ரோல் எல்லாம் பண்ற ஐடியாவே அவருக்கு இல்லை. இப்போதும் அவருக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் படத்தில் அவர் இல்லை” என்கிறார்கள்.