சான் பிரான்சிஸ்கோ,-அமெரிக்காவில், தன் அருகில் இருந்த விமான பயணியை, குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், 55, ரத்தம் வழிய சரமாரியாக தாக்கும் ‘வீடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, புளோரிடா செல்லும் விமானத்தில், முன்னாள் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் அவர், தன் இருக்கையின் பின்புறத்தில் இருந்த சக பயணியின் தலையில் சரமாரியாக குத்து விட்டுள்ளார். காயமடைந்த அவரின் தலையில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது.
இருவரையும் விமானத்தில் இருந்து இறக்கிய போலீசார், காயமடைந்த நபருக்கு சிகிச்சை அளித்தனர். சம்பவம் குறித்து இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில், காயம் அடைந்தவர் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என போலீசார் கூறினர். இதற்கிடையே, சக பயணியை ரத்தம் வழிய மைக் டைசன் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
அதில், அமைதியாக பயணிக்கும் மைக் டைசனை, பின்புறம் இருந்த பயணி ஒருவர் தலையில் தட்டி, விரல்களால் குத்தி கிண்டல் செய்யும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இது குறித்து, மைக் டைசன் உதவியாளர் ஒருவர் கூறியதாவது:தன் இருக்கையில் அமைதியாக இருந்த மைக் டைசனை, பின்புறம் இருந்த பயணி தலையில் தட்டி கிண்டல் செய்துள்ளார்; அத்துடன் தண்ணீர் பாட்டிலையும் டைசன் மீது வீசியுள்ளார். இந்த ஆத்திரத்தில் டைசன் அவரை தாக்கி உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement