விழுப்புரம்: ”சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஸ்டாலின் அரசு தயங்குவது ஏன்?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியது: ”சமூக நீதி என்று பேசுகின்ற முதல்வர் ஸ்டாலின் இடஒதுக்கீடு விவகாரத்தில் கவனம் செலுத்தாமல் உள்ளாரா அல்லது திட்டமிட்டு காலம் தாழ்த்துகிறாரா என்று தெரியவில்லை. அண்மையில் உச்ச நீதிமன்றம் 10.5 சதவீத இட ஒதுக்கீடில் வழங்கிய தீர்ப்பில் 2 முக்கிய பகுதி என்பது, மாநில அரசுக்கு இடஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது. 10.5 சதவீத இட ஒதுக்கீடில் முழுமையான தரவுகள் இல்லை. 30 ஆண்டு காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட அம்பா சங்கர் குழுவின் சாதிவாரிக் கணக்கெடுப்பு இப்போது ஏற்கக் கூடியதல்ல என்று தெளிவாக சொல்லியுள்ளது. மதுரை உயர் நீதிமன்றத்தில் முழுமையாக தரவுகள் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்தத் தீர்ப்பு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு வன்னியர் சமூகத்திற்கு மட்டுமல்ல, இந்த தீர்ப்பு தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களுக்காக ஆபத்தை தரும் தீர்ப்பு. சுமார் 72 சதவீதத்திலிருந்து 74 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்கின்ற தமிழக மக்கள் மற்றும் 18 சதவீதம் ஆதிதிராவிடர்களும், 1 சதவீதம் பழங்குடி மக்கள் என 94 சதவீத மக்களுக்கு இட ஒதுக்கீடு 69 சதவீதமாகும். இதுவும் மண்டல் கமிஷன் தீர்ப்பின் படி 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்பதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 45/94 சட்டத்தை இந்திய அரசியலைப்பு சட்டத்தில் 69 சதவீதமாக சேர்த்தார்.
இதை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் எதன் அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு அம்பா சங்கர் குழு அறிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன் 2010-ம் ஆண்டு முழுமையான சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றது. இப்போது விரைவில் 69 சதவீத வழக்கு விசாரணைக்கு வரும்போது, அம்பா சங்கர் அறிக்கையை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? எனவே முழுமையான சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க 2021-ம் ஆண்டு நீதியரசர் குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ரூ 67 லட்சம் நீதி ஒதுக்கப்பட்டது. என்ன காரணத்தாலோ அந்த ஆணையம் தற்போது செயல்படவில்லை. அதனை ஏன் முடக்கினீர்கள்? அதற்கான காரணம் என்ன? அதனை செயல்பட வைக்கவேண்டும்.
10.5 சதவீத இட ஒதுக்கீடை காப்பாற்றவேண்டுமென்ற ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். எங்களுக்கு பதில் சொல்ல அமைச்சர் துரைமுருகன் வேண்டும். ஆனால் ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சரான துரைமுருகன் அழைக்கப்படவில்லை. முன்னாள் பிற்படுத்தப்பட்ட அமைச்சர் சிவங்கரோ, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தையோ அழைக்கவில்லை. ஏதோ ஒரு கூட்டம் நடத்தியுள்ளீர். சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க ஏன் இந்த அரசு தயங்குகிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் 22 சதவீதத்தினருக்கு மேல் உள்ளனர். அவர்கள் பெறும் இட ஒதுக்கீடு 18 சதவீதம். சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்தவில்லை என்று திருமாவளவனோ, கி. வீரமணியோ கேட்கவில்லை? மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று பிஹார் முதல்வர் நிதீஷ்குமார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். மகாராஷ்ர மாநிலமும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், தமிழக முதல்வர் ஏன் மௌனமாக உள்ளார்? யாருக்கு உதவ 94 சதவீத மக்களின் வயிற்றில் அடிக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இருந்ததா? ஆட்சிக்கு வந்த 2 மாதத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது? இந்தியாவில் நெம்பர் 1 முதல்வர் என சொல்லிக் கொள்ளும் மாநிலத்தில் மின்வெட்டு ஏற்பட காரணம் என்ன? இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மின்வெட்டு, இதில் ஊழல் செய்ய செயற்கையான முறையில் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கவேண்டும் அல்லது கையாலாகாத திறமையற்ற அரசு” என்று அவர் கூறினார்.