சென்னை: சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, 4ஆண்டுகால சொத்துவரியை கட்டாமல் ஏமாற்றி வந்த கவிஞர் வைரமுத்துவின் திருமண மண்டபத்துக்கு சீல் வைப்போம் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்ததைத் தொடர்ந்து, 4 ஆண்டுகால வரியையும் மொத்தமாக செலுத்தி உள்ளார். இது தற்போது பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு இருமுறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. நடப்பாண்டு முதல் சொத்துவரி மேலும் உயர்த்தப்பட்டு உள்ளது. அத்துடன், சொத்து வரியை வசூலிக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், பிரபல கவிஞர் வைரமுத்து 4 ஆண்டு காலமாக சொத்துவரி செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார். ஆனால், தற்போதைய ஆணையர் ககன்தீப் சிங் பேடி சொத்து வரி வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். யாராக இருந்தாலும் சொத்து வரியை முறையாக செலுத்த வேண்டும் இல்லையென்றால் அவர்கள் சொத்துக்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில்சென்னை கோடம்பாக்கம் oரஸ்ட்புரத்தில் வைரமுத்துக்கு சொந்தமான திருமண மண்டபமான பொன்மணி மாளிகை கடந்த 4 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மொத்தம் 8 லட்சம் ரூபாய் வரை சொத்து வரி நிலுவையில் இருந்த நிலையில் பலமுறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டும் வைரமுத்து அதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இந்த ஆண்டும் திமுக ஆட்சிதானே அதனால் ஒன்றும் ஆகாது என்று நினைத்துக்கொண்டிருந்தார்.
ஆனால், இன்று காலை திடீரென மாநகராட்சி வைரமுத்துவின் பொன்மணி மாளிகை திருமண மண்டபத்திற்கு சீல் வைக்க வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வைரமுத்து வேறுவழியில்லாமல், மொத்த பாக்கித் தொகையான, 7 லட்சத்து 93 ஆயிரத்து 241 ரூபாய் சொத்து வரியை செலுத்தி உள்ளார். இதையடுத்து சீல் வைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டனர். வைரமுத்துவின் நடவடிக்கையை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.