Covid-19 scare again at IIT Madras, 12 students test positive: சென்னை ஐஐடி வளாகத்தில் பன்னிரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐஐடி வளாகத்தை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன், வளாகத்தை சுத்திகரிப்பு செய்யவும் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஐஐடி வளாகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொற்று கண்டறியப்பட்டது, மேலும் இரண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 20 ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மருத்துவக் குழுவினர் இந்த மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்தனர் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
“கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. அவர்களின் ஆக்ஸிஜன் அளவு சீராக உள்ளது, எனவே பீதி அடையத் தேவையில்லை. சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் வசதி உள்ளது. நாங்கள் வளாகத்தில் பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். இதுவரை, 365 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, அதன் அடிப்படையில் அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும், ”என்று ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும் தொற்று பாதித்தவர்களை அவர் பார்வையிட்டதாகவும் அவர்கள் நன்றாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மாணவர்கள் மற்றும் பிற வளாகங்களில் வசிப்பவர்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிய வேண்டும், இன்னும் தடுப்பூசி போடவில்லை என்றால் தடுப்பூசி போடவும், உணவைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதையும் படியுங்கள்: ஈபிஎஸ் என் காரை எடுத்துச் செல்லலாம்; ஆனால்… உதயநிதி பேச்சால் அவையில் சிரிப்பலை
டெல்லி, ஃபரிதாபாத், ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஒரு எச்சரிக்கை மணி. மக்கள் தொடர்ந்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும், தங்கள் பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம், ”என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
கனடாவில் இருந்து திரும்பிய நான்கு பேர் உட்பட 31 புதிய கொரோனா தொற்றுகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன, மொத்த எண்ணிக்கை 34,53,351 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 16,583 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. புதன்கிழமை மொத்தம் 23 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர், 243 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு ஏதும் ஏற்படாத நிலையில், பலி எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. மொத்த பாதிப்புகளில், சென்னையில் 16 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.