டெல்லி, ஜஹாங்கிர்பூரியில் இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள் இடிப்பிற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேரா.அருணன், க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில், “டெல்லியில் உள்ள ஜஹாங்கிர் பூரி என்ற இடத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியில் மத்திய பிஜேபி அரசாங்கம் புல்டோசரைக் கொண்டு அவர்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து தள்ளியுள்ளது. முன்னதாக ஹனுமான் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பஜரங்தளத்தினர் மசூதிகள் முன்பாக கத்தி கோஷமிட்டு வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். இதன் தொடர்ச்சியாக மத விரோத கண்ணோட்டத்தோடு முஸ்லிம்களுக்கு எதிராக இந்த கொடுஞ்செயலை அரங்கேற்றியுள்ளது. இந்த அராஜக, வெறிச் செயலை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாக கண்டிக்கிறது.
காலம் காலமாக முஸ்லீம்கள் வாழக்கூடிய அவர்களது வாழ்விடங்களை இடிப்பதற்கு பொய்யான ஒரு காரணத்தை பிஜேபி தரப்பினர் முன்வைக்கின்றனர். ஜஹாங்கீர் பூரி பிரதேசத்தில் வாழக்கூடிய அவர்கள் அனைவரும் பங்களாதேஷில் இருந்து வந்தவர்கள் என்றும், பர்மாவிலிருந்து வந்த ரோஹிங்கியா முஸ்லீம்கள் என்றும் ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்று அம்பலப்படும்போது பாதையை அடைத்து, போடப்பட்டு இருந்த நாற்காலிகள் மற்றும் சேர்களைத்தான் அகற்றினோம் என்று ஒரு பொய்யான பதிலைக் கூறுகிறார்கள்.
நாற்காலிகள் அகற்றுவதற்கு புல்டோசர் எதற்கு என்ற கேள்வியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன் வைக்கும் போது, அதற்கான பதில் அவர்களிடம் இல்லை. வேண்டுமென்றே திட்டமிட்ட வகையில் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டு இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட சங்பரிவார் அமைப்புகள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்துவது வெட்கக்கேடானது.
நல்லவேளையாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு தடையாணை வழங்கி அவர்களை பாதுகாத்து உள்ளது. இல்லையெனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் திருமதி.பிருந்தா காரத் அவர்கள் உடனடியாக தலையிட்டு அந்த இடத்திற்கு விரைந்து சென்று நீதிமன்ற ஆணையை காண்பித்து இடிப்பதை தடுத்து நிறுத்தியுள்ளார். அவருக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலத்திலும் இதேபோன்று இந்து-முஸ்லீம் கலவரத்தை தூண்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சங்பரிவார் அமைப்புகளும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள பிஜேபியும் செய்து வருகின்றன.
இத்தகைய நடவடிக்கைகளை நாடு முழுவதிலும் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கண்டிக்க முன்வர வேண்டுமென்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வற்புறுத்துகிறது. தமிழகத்திலும் இத்தகைய சக்திகள் ஆங்காங்கே மத மோதலை கிளப்பிவிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக மக்கள் இத்தகைய மதவாத சக்திகளுக்கு எதிராக தங்களது வன்மையான குரலை எழுப்ப வேண்டும் என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கேட்டுக்கொள்கிறது.