டெல்லி: டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் வழக்கறிஞர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். காலை 9:40 மணிக்கு ரோகினி நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கறிஞர்களுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் முற்றி 8ம் எண் நுழைவு வாயில் அருகே இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அவர்கள் சண்டையை தொடர்ந்ததால் திடீரென தரையை நோக்கி காவலர் துப்பாக்கியால் சுட்டார். தோட்டா தரையில் பட்டு கான்கிரீட் துகள்கள் தெரித்ததில் ஒரு வழக்கறிஞர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய காவலரை அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டால் சுமார் 2 மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.