லூதியானா: டெல்லி, ஹரியாணாவைத் தொடர்ந்து பஞ்சாபிலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து, டெல்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கடந்த 18-ம் தேதி அறிவித்தன.
இந்நிலையில், பஞ்சாப் மாநில முதன்மைச் செயலாளர் அனுராக் வர்மா நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படுகிறது. குறிப்பாக, பஸ், ரயில், விமானம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து, திரையரங்குகள், மால்கள், பள்ளி வகுப்பறைகள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
பஞ்சாபில் நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் 2,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் கரோனா தொற்று பரவியது. இதைத் தடுக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனிடையே, கரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் அவ்வப்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா குறைந்ததையடுத்து, அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கி கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களாக கரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது 4-வது அலைக்கு அறிகுறியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.