நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் துணை காவல்துறை சூப்பிரண்டு ராஜுவிடம் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில், மர்ம நபர் ஒருவர் தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ் மற்றும் துணை காவல் ஆய்வாளர் ராஜரத்தினம் ஆகியோர் விசாரணை நடத்தியதில் வள்ளியூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் போலி ஐடிகளை உருவாக்கி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, முத்துக்குமார் கேரள மாநிலம் அந்தியூர் கோணம் பகுதியில் பெயிண்டராக வேலைபார்த்து வந்ததை கண்டு பிடித்தனர்.
மேலும், காவல்துறையினர் முத்துக்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையின் போது, முத்துக்குமார் 50-க்கும் மேற்பட்ட அழகான பெண்களின் புகைப்படங்களை அவர்களது முகநூல் கணக்கில் இருந்து டவுன்லோடு செய்து ஆபாசமாக சித்தரித்து, அந்தப் பெண்களுக்கு அனுப்பி உள்ளார்.
பின்னர், அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பாமல் இருப்பதற்கு பணம் தரவேண்டும் என்று மிரட்டியுள்ளார். பல பெண்கள் இதனை வெளியே சொல்ல முடியாமல் பணம் கொடுத்துள்ளனர்.