சென்னை: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர் செந்தமிழ் சாலினி மற்றும் முத்தமிழ் சாமினி தமிழ் ஆர்வத்தினைப் பாராட்டி தலா ரூ.1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ் மொழியின் மீது கொண்ட ஈடுபாட்டால் திருக்குறள், தொல்காப்பியம், திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய நூல்களை மனனம் செய்து பல விருதுகளைப் பெற்றுள்ள தேனி மாவட்டம், மறவப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த இரட்டையர் செந்தமிழ் சாலினி மற்றும் முத்தமிழ் சாமினி ஆகியோரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (22.4.2022) தலைமைச் செயலகத்திற்கு, அழைத்துப் பாராட்டி, அவர்களது தமிழ் இலக்கிய இலக்கணத் திறனை மேலும் ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களது குடும்ப சூழ்நிலையைக் கருதியும், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் தலா 1 இலட்சம் ரூபாய், என மொத்தம் 2 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார்.
தேனி மாவட்டம், மறவப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் செந்தமிழ் சாலினி மற்றும் முத்தமிழ் சாமினி ஆகியோர் 8-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். குறள் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையால் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் மாணவிகள் இருவரும் கலந்துகொண்டு 1330 குறட்பாக்களையும் சிறந்த முறையில் மனனம் செய்து ஒப்பித்து தலா ரூ.10,000/- காசோலைகள் பெற்றுள்ளனர்.
அண்மையில், உலகத் திருக்குறள் சமுதாய மையம் ஏற்பாடு செய்த தொல்காப்பியம் மனன முற்றோதல் நிகழ்ச்சியில் 3.4.2022 அன்று கலந்துகொண்டு 12 மணிநேரம் தொடர்ச்சியாக தொல்காப்பியம் முழுமையும் (1610 நூற்பாக்கள்) இவ்விரு மாணவிகளும் முற்றோதல் செய்து, புதுச்சேரி அகில இந்திய உலகச் சாதனைப் பதிவு மையத்தின் ”உலகத் தொல்காப்பியத் தூதர்” என்ற விருதினைப் பெற்றுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.