புதுடில்லி : மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாவதை தடுக்கும் நோக்கத்தில், ‘சார்ஜ்’ செய்யப்பட்ட ‘பேட்டரி’களை மாற்றிக் கொள்ளும் வரைவு திட்டத்தை, ‘நிடி ஆயோக்’ வெளியிட்டுள்ளது.
பேட்டரி வாயிலாக இயங்கும் மின்சார வாகனங்களை, ‘சார்ஜிங் பாயின்ட்’டில் பொருத்தி சார்ஜ் செய்ய சில மணி நேரங்கள் ஆகின்றன. இந்த காலதாமதத்தை குறைக்க, ஏற்கனவே சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை வாங்கி, பழைய பேட்டரிகளை சார்ஜில் பொருத்தும் வழக்கம் வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது.இத்திட்டத்தை நம் நாட்டிலும் அமல்படுத்துவதற்கான திட்ட வரைவு அறிக்கையை, நிடி ஆயோக் வெளியிட்டுள்ளது.
இதில், எந்த வகை பேட்டரிகளை வாகனங்களில் பொருத்த வேண்டும்; பேட்டரி சார்ஜிங் மையங்களுக்கான கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும், கோடைக் காலத்தில் அதிக வெப்பம் காரணமாக தீ விபத்துகள் ஏற்படாத அம்சங்கள் கொண்டதாகவும் பேட்டரிகள் இருக்க வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்களில் இந்த பேட்டரி மாற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன், முதலில் மாநில தலைநகரங்கள், பெருநகரங்களில் பேட்டரி மாற்றும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், மற்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஜூன் 5ம் தேதி வரை கருத்துக்கள் கேட்கப்பட உள்ளன.
Advertisement