`நீதிமன்ற கட்டடத்துக்கு ஊழல் பின்னணி கொண்ட அமைச்சர் அடிக்கல் நாட்டுவதா?' – அண்ணாமலை கடிதம்

சென்னை உயர்நீதிமன்ற கட்டட அடிக்கல் நாட்டு விழாவில், ஊழல் பின்னணி உடைய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 9 மாடி கொண்ட நிர்வாக பிரிவு கட்டடம் மற்றும் விழுப்புரம், நாமக்கல் மாவட்ட நீதிமன்றங்களுக்கான கூடுதல் கட்டடங்கள், நீதித்துறை அலுவலர் விடுதிகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
image
இதனிடையே, நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக பங்கேற்க உள்ள மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது ஊழல் வழக்கு இருப்பதை சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். உயர்நீதிமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது ஊழல் வழக்கு இருப்பதையும், ஊழல் பின்னணி உடைய நபருடன் பொதுநிகழ்வில் மேடையை பகிர்ந்துகொள்வது நீதித்துறை மாண்பைக் குலைத்துவிடும் என்றும், அதுபோன்ற மாண்புக்குலைவான சம்பவங்கள் நீதித்துறையின் கடமைக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் என்றும், வெட்கக்கேடான செயல் என்றும் அண்ணாமலை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
image
கடந்த 2004-ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கான துவக்க விழாவில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்க, அவர் மீது இருந்த வழக்கை சுட்டிக்காட்டி திமுக எதிர்ப்பு தெரிவித்ததால், ஜெயலலிதா அன்றைய நிகழ்வில் பங்கேற்பதைத் தவிர்த்தார் என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, நாளைய நிகழ்வில் இத்தகைய ஊழல் பின்னணி உடைய மாநில அமைச்சரும், மதிப்புமிகு நீதியரசர்களுடன் ஒன்றாக பங்கேற்கவிருப்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டுவருவதற்காக கடிதம் எழுதியிருப்பதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்தி: 7 out of 7 – மும்பையின் தோல்வி மும்பையில் அல்ல; பெங்களூருவிலேயே தீர்மானிக்கப்பட்டது!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.