டெல்லியில் எப்போதும் குற்றச் சம்பவங்களுக்கு பஞ்சமே கிடையாது. பட்டப்பகலில் சிறைக்குள் புகுந்து கொலை செய்வது, சிறைக்குள் இருந்துகொண்டே குற்றங்களைச் செய்வது என சர்வ சாதாரணமாக குற்றச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், டெல்லி சாகர் பூர் சாலையில் நேற்று பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு விரைந்துச் சென்றனர். கத்திக்குத்து காயங்களுடன் பெண் ஒருவர் ரோட்டில் விழுந்து கிடந்தார். அவரின் குழந்தைகள் அருகில் அழுது கொண்டு நின்று கொண்டிருந்தனர். அதையடுத்து, போலீஸார் அந்தப் பெண்ணை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், அவர் சிகிச்சைப் பலனலிக்காமல் இறந்துபோனார். இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது, கொலை செய்யப்பட்ட பெண்ணை அவர் குழந்தைகளுடன் மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் விரட்டி வந்துள்ளார். அந்தப் பெண் தனது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விரட்டிவந்த நபர் அந்தப் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
அவரைப் பிடிக்க யாரும் முயலவில்லை என்று கூறப்படுகிறது. அவர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணும், அவரைக் கொலை செய்த நபரும் முன்பு பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வந்தனர் என்று மட்டும் தெரியவந்துள்ளது. தற்போது அந்தப் பெண் வேறு ஒரு வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அவர்களுக்குள் என்ன பிரச்னை, என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய கொலையாளியைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.