இஸ்லாமாபாத் : பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தான் பதவி இழக்க ராணுவ தலைமை தளபதி தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
பாக்.,கில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலகினார். தற்போது, பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது.இந்நிலையில் இம்ரான் கான் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
பாக்.,கிற்கு இம்ரான் கானை விட ராணுவம் தான் தேவை. ராணுவம் வலிமையற்று இருந்திருந்தால் இந்நேரம் பாக்., மூன்றாக சிதறியிருக்கும். ராணுவத்தை குறை கூறி என் கட்சி எப்போதும் பேசியதில்லை. ஆனால் வலிமைமிக்க ராணுவத்தில் உள்ள சில சக்திகள் தவறான வழிகளை பின்பற்றி என்னை பதவியில் இருந்து வெளியேற்றி விட்டன.
ராணுவத்தில் மனிதநேயம் உள்ளோரும் இருக்கின்றனர். அதனால் ஒருவர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த ராணுவத்தை குறை கூற முடியாது. என் வாழ்நாளில், மூன்று ஆண்டுகள் பிரதமராக பணியாற்றிய காலம் தான் மிகக் கடினமானது. ஊழலை தடுத்ததால் சில அமைச்சர்கள் என்னை விட்டு வெளியேறினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாக்., அரசை ராணுவம் தான் மறைமுகமாக இயக்கி வருகிறது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பஜ்வா, உளவுத் துறை தலைவர் பதவிக்கு நதீம் அஞ்சுமை பரிந்துரைத்தார். அதை இம்ரான் கான் ஏற்க மறுத்தார். இதனால் இம்ரான்- பஜ்வா இடையே மோதல் எழுந்தது. இறுதியில் இம்ரான் கான் பணிந்து நதீம் அஞ்சுமை உளவுத் துறை தலைவர் பதவியில் நியமித்தார். எனினும் ராணுவத்திற்கும் இம்ரானுக்கும் இடையே தொடர்ந்து உரசல் இருந்து வந்தது.
Advertisement