அகமதாபாத்: பாஜகவிடம் சில நல்ல விஷயங்கள் உள்ளன, அவர்கள் வலுவாக உள்ளனர், அதை நாம் ஒப்புக்கொள்ள தான் வேண்டும் என குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில காங்கிரஸில் உட்கட்சிப்பூசல் ஏற்பட்டுள்ளது. தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ள குஜராத் மாநில காங்கிரஸின் செயல் தலைவர் ஹர்திக் படேல் அக்கட்சியில் இருந்து விலகப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கு ஏற்ப குஜராத் காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து அவர் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதேசமயம் காங்கிரஸில் இருந்து வெளியேற மாட்டேன் எனவும், காங்கிரஸின் வளர்ச்சிக்கு 100 சதவீதம் பணியாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் அவர் மீண்டும் காங்கிரஸ் உட்கட்சி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
பாஜகவைப் பற்றி சில நல்ல விஷயங்கள் உள்ளன. அதை நாம் ஒப்புக்கொள்ள தான் வேண்டும். அவர்கள் முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள். பாஜக தலைவர்கள் தலைமைப் பண்புகளைக் கொண்டிருப்பதாலும், சரியான முடிவுகளை எடுப்பதாலும் பாஜக வலுவாக உள்ளது. பாஜகவுக்கு நல்ல வலுவான அடித்தளம் உள்ளது.
அவர்கள் சக்திவாய்ந்தவர்கள். எதிரிகளை ஒருபோதும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. நாம் எதிரியின் பலத்தை ஏற்று அவர்களை எதிர்த்துப் போராட அந்த திசையில் செயல்பட வேண்டும்.
தலைமைதான் பிரச்சனை
குஜராத்தில் எதிர்க்கட்சியாக உள்ள எங்களால் மக்கள் குரலை உயர்த்த முடியவில்லை. எதிர்க்கட்சிகள் மக்களின் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து போராட வேண்டும். எங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால், மக்கள் வேறு விருப்பங்களைத் தேடுவர்.
குஜராத் காங்கிரஸ் கட்சிக்கு தலைமைதான் பிரச்சனை. குஜராத்தில் தனிப்பட்ட எந்த தலைவருடனும் எனக்கு பிரச்சனை இல்லை. தலைமை யாரையும் வேலை செய்ய விடாது. யாரேனும் வேலை செய்தால், அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள்.
கட்சி தலைமையிடம் எனது கவலையை தெரிவித்துள்ளேன், விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளனர். வீட்டில் உங்களுக்குப் பிடிக்காதபோதும், உங்கள் அப்பா, அம்மாவுடன் மகிழ்ச்சியாக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறீர்கள். நான் உண்மையைச் சொல்கிறேன், அதனால் கட்சியை விட்டு விலகுவதாக நினைக்க வேண்டாம். பாஜகவில் சேரும் எண்ணம் எனக்கு இல்லை. அப்படி ஒரு எண்ணம் எனது மனதில் எப்போதும் ஏற்பட்டதில்லை.
நாங்கள் பகவான் ராமரை நம்புகிறோம். என் தந்தையின் நினைவு நாளில், பகவத் கீதையின் 4,000 பிரதிகளை விநியோகிக்க உள்ளேன். நாங்கள் இந்து தர்மத்தைச் சேர்ந்தவர்கள், இந்துவாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹர்திக் படேலின் இந்த கருத்தால் குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.