ஜம்மு: ஜம்முவில் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையின் முகாம் மீது அதிகாலையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் முயற்சியை வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். ஜம்மு காஷ்மீருக்கு நாளை பிரதமர் மோடி அரசு முறை பயணமாக செல்கிறார். ஜம்முவின் சம்பா மாவட்டத்தின் பாலி கிராமத்தில் கொண்டாடப்படும், ‘தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்,’ நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இதனால், ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பா மாவட்டத்தில் நேற்று காலை ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினரின் முகாம் மீது தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்த முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பாகிஸ்தானில் இருந்து சர்வதேச எல்லை வழியாக சம்பா மாவட்டத்திற்குள் நுழைந்த 2 தீவிரவாதிகள், சஞ்வானில் உள்ள தொழில் பாதுகாப்பு படை முகாம் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த சதி செய்தனர். இதற்காக நேற்று அதிகாலை முகாமை நோக்கி முன்னேறி னர். முகாமில் இரவு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் இதை பார்த்ததும் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதே நேரத்தில் 15 வீரர்களுடன் முகாமில் இருந்து பேருந்து ஒன்று, ஜம்மு விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. உடனே, தீவிரவாதிகள் பேருந்தின் மீது கையெறி குண்டுகளை வீசினர். மேலும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் படேல் வீர மரணம் அடைந்தார். வீரர்களின் தாக்குதல் தீவிரமாகவே, தீவிரவாதிகள் தப்பி குடியிருப்பு பகுதியில் பதுங்கினர். வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகள் அங்கிருந்த வீடு ஒன்றில் பதுங்கி இருந்தனர்.கழிவறையில் பதுங்கி இருந்த ஒரு தீவிரவாதியை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். பின்னர், வீட்டில் பதுங்கி இருந்த மற்றொரு தீவிரவாதி, வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினான். ஒரு சில மணி நேர சண்டைக்கு பிறகு அவனது தாக்குதலை முறியடித்த வீரர்கள் அவனையும் சுட்டுக் கொன்றனர். இருவரும் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் உட்பட மொத்தம் 9 வீரர்கள் காயமடைந்தனர். தொழில் பாதுகாப்பு படையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் முகேஷ் சிங் கூறுகையில், ‘‘போலீசார், சிஎஸ்ஐஎப், சிஆர்பிஎப் மற்றும் ராணுவத்தினர் இணைந்து, தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த தீவிரவாதிகள் இருவரும் மனித வெடிகுண்டாக செயல்படுபவர்கள் அணியும் உடைகளை அணிந்திருந்தனர். ஏராளமான ஆயுதங்கள், வெடிப்பொருட்களும் வைத்திருந்தனர். இந்த இடத்தில் துணை ராணுவத்தின் முகாம் உள்ளது. அதிகாலையில் புகுந்து அந்த இடத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தவே இவர்கள் வந்துள்ளனர். அவர்களின் சதி திட்டம் நிறைவேறி இருந்தால், வீரர்களுக்கு அதிகளில் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும்,” என்றார். மோடி வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக, அவரின் பயணத்தை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பாரமுல்லாவில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் பலமிக்க கமாண்டரான யூசுப் கான்டேரா உட்பட 2 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. அதன் பிறகும் அங்கு சண்டை நீடித்தது. நள்ளிரவில் 3வது தீவிரவாதியும் கொல்லப்பட்டான். 24 மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், நேற்று காலை மேலும் ஒரு தீவிரவாதியை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இங்கு ஒரே இடத்தில் மொத்தமாக 4 தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு உள்ளனர்.