அகமதாபாத்: இந்தியா – பிரிட்டன் இடையே ராணுவம், வர்த்தகம், மக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது. இதை மேலும் அதிகரித்து இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். லண்டனில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திற்கு நேற்று அவர் வந்தார்.அவரை குஜராத் ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர பட்டேல் ஆகியோர் வரவேற்றனர். குஜராத்துக்கு பிரிட்டன் பிரதமர் ஒருவர் வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.குஜராத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் மேற்கொண்ட போது, சாலையின் இருபுறமும் வெள்ளை துணியை கொண்டு குடிசை பகுதிகள் மறைக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து வளர்ச்சி என்ற பெயரில் முன்வைக்கப்படும் குஜராத் மாடல் இதுதானா என சமூக வலைத்தளங்களில் விவாதமும் எழுந்துள்ளது. சமீபகாலமாக இந்தியா வரும் சர்வதேச தலைவர்கள் முதலில் குஜராத்திற்கு அழைத்து செல்லப்படுவது இயல்பாகிவிட்டது. அதே நேரத்தில் குடிசை பகுதிகளை அவர்களின் கண்ணில் படாமல் மறைப்பதற்காக சுவர்கள் எழுப்புவதும் பச்சை நிற திரை கொண்டு மறைப்பதும் குஜராத் அரசின் வாடிக்கையாகிவிட்டது.