அகமதாபாத்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக நேற்று குஜராத் வந்தடைந்தார். அங்குள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை அவர் பார்வையிட்டார். இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு நேற்று வந்தார். 2 நாள் பயணமாக அகமதாபாத் விமான நிலையம் வந்த அவரை மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் உயர் அதிகாரிகள் விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றனர்.
மேலும் விமான நிலையத்திலிருந்து அவர் தங்கியுள்ள ஓட்டல் வரையிலான 4 கி.மீ. தூரத்துக்கு மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டன் பிரதமர் ஒருவர் குஜராத் வந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்ற அவர், அங்கு சுமார் 30 நிமிடங்கள் இருந்தார். அப்போது, காந்தி பயன்படுத்திய ராட்டையை சுற்றிப் பார்த்தார்.
முன்னணி தொழிலதிபர்கள் பலரை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையிலான தொழில், வர்த்தக தொடர்புகள் பற்றி ஆலோசனை நடத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியை போரிஸ் ஜான்சன் நேற்று சந்தித்துப் பேசினார்.
அதானி அளித்த விருந்து
இதுகுறித்து கவுதம் அதானி தனது ட்விட்டர் பக்கத்தில், “குஜராத் மாநிலத்துக்கு முதல் முறையாக வந்துள்ள பிரிட்டன் பிரதமருக்கு எங்கள் தலைமை அலுவலகத்தில் விருந்து அளித்து கவுரவித்தோம். புதுப்பிக்கத்தக்க, பசுமை எச்2 மற்றும் புதிய எரிசக்தியை நோக்கமாகக் கொண்டுள்ள பருவநிலை மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான திட்டத்தை ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் தொழில்நுட்பத் துறையில் பிரிட்டன் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.
பின்னர் பஞ்ச்மஹால் மாவட்டம் ஹலோல் நகரில் உள்ள ஜேசிபி தொழிற்சாலையை போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். அப்போது, மாநில முதல்வர் புபேந்திர படேல் உடன் இருந்தார். இதையடுத்து, காந்தி நகரில் உள்ள குஜராத் பயோடெக்னாலஜி பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அந்நகரில் உள்ள புகழ் பெற்ற அக்சர்தாம் கோயிலை அவர் பார்வையிட்டார்.
பிரதமருடன் இன்று சந்திப்பு
குஜராத் பயணத்தை முடித்துக் கொண்ட போரிஸ் ஜான்சன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேச உள்ளார். இருதரப்பு உறவை பலப்படுத்துவது, தாராள வர்த்தக ஒப்பந்தம்(எப்டிஏ), இந்தோ-பசிபிக் விவகாரத்தில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது, பாதுகாப்பு தொடர்பான உறவை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.