பெங்களூரு:பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு கர்நாடகாவில் 1,076 மையங்களில் இன்று ஆரம்பமாகிறது. முறைகேடு தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மூன்று முறை தேதி குறித்து, பின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று தேர்வு துவங்குகிறது. மே 18 வரை நடக்கிறது.மாநிலம் முழுதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சத்து 46 ஆயிரத்து 936 மாணவர்கள்; மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 319 மாணவியர் என ஆறு லட்சத்து 84 ஆயிரத்து 255 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
முறைகேடு தடுக்க 2,152 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள், 858 தாலுகா கண்காணிப்பு குழுக்கள், 64 மாவட்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு, தலைமை மேற்பார்வையாளர் மட்டுமே கேமரா வசதி இல்லாத சாதாரண மொபைல் போன் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.மற்றபடி மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு மையங்களை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.மையங்களுக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைகள் காலை 9:00 மணி முதல், பிற்பகல் 1:30 மணி வரை மூடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.ஹால் டிக்கெட் காண்பித்து, பி.எம்.டி.சி., – கே.எஸ்.ஆர்.டி.சி., அரசு பஸ்களில் வீட்டிலிருந்து, தேர்வு மையத்துக்கு இலவசமாக செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.தேர்வு மையங்களில் மாணவர்களின் பதிவு எண்கள் எழுதும் பணியில் மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டனர்.மாணவர்கள் பதற்றமின்றி, தைரியமுடன் தேர்வு எழுதும்படி தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ் அறிவுறுத்தினார்.
Advertisement