காரைக்கால்: புதுச்சேரியில் உரிய பணியிடங்களில் மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று புதுவை முதல்வருக்கு எம்.எல்.ஏ நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.
காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச்.நாஜிம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”புதுச்சேரி அரசு வன்னியர்கள், மீனவர்கள், இஸ்லாமியர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டு முறையை ஏற்கெனவே அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பணியிடங்களில் குரூப் சி மற்றும் டி பிரிவுகளில் மட்டுமே மாநில அரசு அறிவித்த இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற முடியும். மற்ற பிரிவுகளில் மத்திய அரசின் மத்திய பணியாளர் தேர்வுக் குழுவின் மூலம் அனுமதி பெற்றுதான் செய்ய முடியும்.
ஆனால், தற்போது மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறை சரியாக பின்பற்றப்படுவதில்லை. 6-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் தற்போது குரூப் டி பணியிடங்கள் நீக்கப்பட்டுவிட்டன. குரூப் சி பணியிடங்கள் மறுவகைப்படுத்துதல் செய்யப்பட்டு, அந்தப் பணியிடங்கள் குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர்கள் என்று மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இதனால் மாநில அரசு அறிவித்த இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இது குறித்து மத்திய பணியாளர் தேர்வுக்குழுவின் கவனதுக்கு கொண்டு சென்றபோது, குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர்கள் பணியிடங்களை பொறுத்தவரையில் அந்த மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெளிவாக சொல்லப்பட்டு, அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்த உத்தரவு கடந்த 4 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக அமைச்சரவை முடிவெடுக்க வேண்டும் என்று சட்டத்துறை கருத்து தெரிவித்துள்ளது.
தற்போது மின் துறையில் குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதில் மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாவிட்டால், அடுத்தடுத்த துறைகளில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்போது இட ஒதுக்கீட்டு முறை பின்பற்ற முடியாத நிலை உருவாகும். புதுச்சேரி முதல்வரையும் ஏற்கெனவே சந்தித்து எடுத்துக் கூறியுள்ளேன்.
எனவே, முதல்வர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, நம் மாநில மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்துகிறேன். மேலும், மாநில அரசின் ஓபிசி பட்டியலில் உள்ள சோழிய வெள்ளாளர், கன்னடிய செட்டியார் சமூகங்கள் மத்திய அரசின் ஓபிசி பட்டியலில் ஏற்கெனவே இருந்த நிலையில் தற்போது அப்பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளது. எனவே மீண்டும் அந்த சமூகங்களை மத்திய ஓபிசி பட்டியலில் இணைக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.