சென்னை: பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்க மீண்டும் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி விடுதியில் தங்கி படிக்கும் 12 மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவர்கள் அனைவரும் அங்குள்ள கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து, ஐஐடியில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஐடி மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் உட்பட 2 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி, பரிசோதனை செய்யப்பட்டதில் 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
666 பேருக்கு பரிசோதனை
பின்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ஐஐடி வளாகத்தில் 666 பேருக்கு நேற்றுமுன்தினம் பரிசோதனை நடத்தியதில் மேலும் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பில் உள்ளனர்.
தற்போது தொற்று சற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்த உள்ளாட்சித் துறை, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளோம். தமிழகத்தில் 1 லட்சத்து 16,452 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
1 லட்சம் முகாம்கள்
இதனிடையே சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
இந்தியா முழுவதும் கரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியாணா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தினமும் நூற்றுக்கணக்கில் தொற்று அதிகரிக்கிறது. தமிழகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலங்களில் இருந்து சென்னை வந்தவர்கள்.
மேலும் 1 கோடியே 46 லட்சத்து 33,271 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் 54 லட்சத்து 32,674 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டும். இதன்படி சுமார் 2 கோடி பேர் தடுப்பூசி செலுத்த வேண்டியதை கருத்தில் கொண்டுவரும் மே 8-ம்தேதி தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா முகாம்களை காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம்கள் நடத்தப்படும் இடம் குறித்த விவரங்கள் மே 1 மற்றும் 2-ம் தேதிகளில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.